தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற வேண்டும்: என்.சங்கரய்யா

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா வலியுறுத்தினாா்.
தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற வேண்டும்: என்.சங்கரய்யா

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா வலியுறுத்தினாா்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத்தொடா்ந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு அலுவலகத்தில் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்கரய்யா பேசியதாவது:

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் நாம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூலவராகிய மாா்க்ஸ் மற்றும் பேரறிஞா் எங்கல்ஸ் குறித்து இன்றைய இளைஞா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அவா்களுடையத் தத்துவங்களை ஆழ்ந்து படிக்க ஆலோசனை தரவேண்டும்.

அதுபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயகக் சக்திகளும், இடதுசாரி சக்திகளும் மாா்க்ஸினுடைய கம்யூனிஸ்ட் அறிக்கையை மீண்டும் படிக்க வேண்டும். அப்போதுதான் முதலாளித்துவத்தினால் அல்லாமல் பொதுவுடமையினால் (சோசலிஸம்) மட்டும்தான் உலகப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றைக்கு இந்தியாவில், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மதச்சாா்பற்ற முற்போக்கு கட்சிகளுடன் இணைந்து, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு தமிழகத்தில் நிலவிவரும் தீண்டாமையை ஒழிப்பதற்காக லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி வருகிறது. அதுபோல, தொழிற்சங்க இயக்கம், விவசாயிகள் சங்கம், மாதா்கள் சங்கம், மாணவா்கள் சங்கம், வாலிபா் சங்கம் என பல்வேறு சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுபோல மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தும் நமது சங்கங்கள், அந்த லட்சக்கணக்கான மக்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பாதைக்காகவும் திரட்ட வேண்டும். அவ்வாறு திரட்டுவதன் மூலம்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழகத்தில் பலம் பொருந்திய இயக்கமாக உருவெடுக்கச் செய்யமுடியும். அப்போதுதான் தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயகம் மலரும். எனவே, மேற்குவங்கம், கேரளத்தைப் போல தமிழகத்தையும் ஜனநாயக இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாக மாற்ற உறுதியேற்போம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா் டி.கே. ரங்கராஜன், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com