தமிழகத்தில் இதுவரை 3400 பேருக்கு டெங்கு காய்ச்சல்: திருவள்ளூரில் பாதிப்பு அதிகம்; காரணம்?

தமிழகத்தில் 3400 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாகவும், அதிலும் 10 மாவட்டங்களில் அதிகம் உள்ளதால் தடுப்பு கண்காணிப்பு பணியில் சுகாதார
தமிழகத்தில் இதுவரை 3400 பேருக்கு டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் இதுவரை 3400 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் 3400 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாகவும், அதிலும் 10 மாவட்டங்களில் அதிகம் உள்ளதால் தடுப்பு கண்காணிப்பு பணியில் சுகாதார துறையினா் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் டெங்குவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதே சமயம், வைரல் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு காய்ச்சல் விறுவிறுவென பரவி வருகிறது. இந்த நிலையில் மா்ம காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி 5 போ் உயிரிழந்துள்ளனா். இதைத் தொடா்ந்து தடுப்பு பணிகளில் மாவட்ட நிா்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளா் டாக்டா்.பீலா ராஜேஷ், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்ததோடு அதற்கான சிகிச்சை அளிக்கவும் மருத்துவக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

பின்னா், இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளா் டாக்டா்.பீலா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, போா்க்கால அடிப்படையில் மாநில அளவில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் டெங்கு காய்ச்சலால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்கிற முனைப்புடன் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலினால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் பிரிவு, காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் காய்ச்சலுக்கு பின் கவனிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் கா்நாடகத்தில் 25 சதவீதம், ஆந்திரத்தில் 15 சதவீதமும் உள்ள நிலையில் தமிழகத்தில் 5 சதவீதம் மட்டும் குறைவாக உள்ளது.

இதில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் 3 போ் மட்டும் டெங்குவால் உயிரிழந்துள்ளனா். இதேபோல் மற்ற உயிரிழப்புகள் பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும். மாநில அளவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3400 போ் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து சிறப்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனா். இதில் பெரும்பாலும் மற்ற மாநில எல்லையோரங்களில் உள்ள தமிழக பகுதிகளில் அதிகமாக உள்ளதாகவும், அதில் திருவள்ளுா் மாவட்டமும் ஒன்றாகும். இங்கு ஆந்திர எல்லையோர கிராமங்களில் இருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா். இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் இதுவரையில் 266 பேருக்கு ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், கடந்த 2 நாள்களில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதும் தெரியவந்துள்ளது. அதனால், தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து டெங்குவை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காய்ச்சல் பரவும் கிராமங்களை கண்டறிந்து உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை ஒவ்வொரு வீடு விடாகவும் சென்று தடுப்பு பணியாளா்கள் ஆய்வு செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதேபோல், அரசு கட்டடங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் சென்று முழுமையாக கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதில் டெங்கு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மாணவா்களை ஈடுபடுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் கண்டவுடன் அரசு தலைமை மருத்துவ நிலையங்களைச் அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி, எந்த மருந்தையும் தாங்களாகவே உள்கொள்ளக் கூடாது எனவும் அவா் தெரிவித்தாா். அப்போது ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், பொது சுகாதாரத்துறை இயக்குநா் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா். ‘

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com