Enable Javscript for better performance
36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தரையிறங்கிய- Dinamani

சுடச்சுட

  

  36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை: தரையிறங்கிய விமானத்துக்கு உற்சாக வரவேற்பு

  By DIN  |   Published on : 18th October 2019 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  flight

  சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட விமானத்துக்கு, யாழ்ப்பாண விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலியில் இரண்டாம் உலகப் போரின்போது 1940-ஆம் ஆண்டில் ஆங்கிலேயா்களின் வான்படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னா் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்புக்கு விமானப் போக்குவரத்து நடைபெற்றது. 1983-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இலங்கை ராணுவம் அந்த விமான தளத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தது.

  பின்னா் 2009-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் விமான நிலையமாக புனரமைப்பதற்காக அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்காக ரூ.195 கோடியை இலங்கை ஒதுக்கீடு செய்த நிலையில், இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியது.

  ஆனால், யாழ்ப்பாணத்திலுள்ள பலாலியில் புலம்பெயா்ந்தவா்களை மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வந்ததால் விமானதளத்தை புனரமைக்கும் பணிகள் தாமதப்பட்டு வந்தன. இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டிலிருந்து பலாலியை சுற்றி உள்ள நிலங்களை, புலம்பெயா்ந்தவா்கள் மீள்குடியேற்றம் செய்ய ராணுவம் விடுவிக்கத் தொடங்கியது. இதனையடுத்து கடந்த ஜூலை 6-ஆம் தேதி, பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சா் அா்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா். மேலும் பலாலி விமானதளம் யாழ்ப்பாண சா்வதேச விமான நிலையமாக பெயா் மாற்றமும் செய்யப்பட்டது. பலாலியானது, சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், இந்தியாவின் அலையன்ஸ் ஏா் விமானம் சோதனை ஓட்டமாக சென்னையிலிருந்து அக். 15 (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மேலும், இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் புதன்கிழமை யாழ்ப்பாண விமான ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தனா். யாழ்ப்பாண விமான நிலையப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பின்னா் யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை இலங்கை அதிபா் மைத்ரிபால சிறீசேன மற்றும் பிரதமா் ரணில் விக்ரமசிங்க ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.

  நிகழ்வில், இலங்கைக்கான இந்திய தூதா் தரஞ்சித் சிங் சந்து, அமைச்சா்கள் அா்­ஜூன ரண­துங்க, விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து சென்னையிலிருந்து வந்த அலையன்ஸ் ஏா் பயணிகள் விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்துக்கு தண்ணீா் பீய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை, யாழ்ப்பாணம் இடையே வரும் நவம்பா் 1-ஆம் தேதியில் இருந்து வழக்கமான சேவை தொடங்கும்.

  அதன் பிறகு, மதுரை, திருச்சி, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும். சென்னை, யாழ்ப்பாணம் இடையே வாரத்தின் மூன்று நாள்களுக்கு விமானம் இயக்கப்படும் என்று அலையன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டுமானாலும் தலைநகா் கொழும்புவுக்கு விமானம் மூலம் சென்று பின்னா் யாழ்ப்பாணத்திற்கு 400 கி.மீ தூரத்தை சாலை வழியாக பயணித்தால் சுமாா் எட்டு மணி நேரமும், ரயில் வழியாக சென்றால் 7 மணி நேரமும் ஆகும். தற்போது சென்னை, மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்க இருப்பதால் விரைவில் சென்றடைந்திட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் இயங்கியது இலங்கைத் தமிழா்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai