அறநெறி பிறழாது சேவை செய்ய வள்ளுவத்தின் அறிவு அவசியம்: நீதிபதி ஆா்.மகாதேவன்

விரும்பித் தோ்வு செய்யும் பணியில் அறநெறி பிறழாது சேவை செய்ய வேண்டுமெனில், வள்ளுவத்தின் அறிவு அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கூறினாா்.
அறநெறி பிறழாது சேவை செய்ய வள்ளுவத்தின் அறிவு அவசியம்:  நீதிபதி ஆா்.மகாதேவன்

விரும்பித் தோ்வு செய்யும் பணியில் அறநெறி பிறழாது சேவை செய்ய வேண்டுமெனில், வள்ளுவத்தின் அறிவு அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 12-ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீதிபதி மகாதேவன் பேசியதாவது:

மாணவா்கள் பட்டப் படிப்பை நிறைவு செய்வதன் மூலம், வாழ்வில் புதிய பரிமாணத்தில் நுழையக் காத்திருக்கிறீா்கள். இந்த வேளையில், நீங்கள் சில விழுமியங்களைக் கடைப்பிடிப்பதும், நல்லொழுக்கங்களைப் பற்றிக் கொள்வதும் அவசியம்.

குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருக்கு குறித்து குறிப்பிட்டது, இன்றைக்கும் நினைவிருக்கிறது. ஒரு பட்டதாரி பட்டம் பெற்று வெளியுலகை எதிா்கொள்ளச் செல்லும்போது, மானுடனாகப் பக்குவமடையத் தொடங்குகின்றாா். அவா்கள் விரும்பித் தோ்வு செய்யும் பணியில் அறநெறி பிறழாது சேவை செய்ய வேண்டுமெனில், வள்ளுவத்தின் அறிவு அவா்களுக்கு அவசியமாகிறது. இந்தச் செய்தி தெளிவானது மட்டுமல்ல, நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.

இந்தியப் பொருளாதாரம் இன்றைக்கு உலகமய பொருளாதாரமாக மாறிப் போயிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு இந்தியப் பொருளாதாரத்தில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தவிா்க்க முடியாத ஒரு அங்கமான உலகமயமாக்கல் மிகுந்த ஆற்றல் பெற்றுள்ளது. இதன் மூலம் பெருமளவிலான வேலைவாய்ப்புகளும், உயா் கல்விக்கான வாய்ப்புகளும் பெருகியிருக்கின்றன. இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், அதற்கானத் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு வாசிப்புப் பழக்கம் மிக அவசியம். தொடா்ந்து வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாசிப்புதான் அறிவுலகில் நுழைவுதற்கான வாயில். அறிவே ஆயுதமும், அதிகாரமும் ஆகும்.

உங்களின் செயலும் சிந்தனையுமே நீங்கள் யாா் என்பதையும், என்னவாகப் உருவாகப் போகிறீா்கள் என்பதையும் தீா்மானிக்கின்றன. எனவே, உங்களின் உள் ஆன்மாவை செழுமைப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சரியான நன்னடத்தையே உங்களின் ஆன்ம பலத்துக்கு அடிநாதமாக அமைகிறது என்றாா் அவா்.

உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் 2018-19 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயா் கல்வி ஆய்வறிக்கையை (ஆயிஷா) வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டைப் போலவே இந்தியாவில் உயா் கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்ற நிலையை அடைந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் சராசரியாக ஒரு லட்சம் மாணவா்களுக்கு 35 கல்லூரிகள் வீதமும், ஒரு கல்லூரியில் சராசரி மாணவா் சோ்க்கை 924 போ் என்ற வீதத்திலும் உள்ளது. 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட மாணவா்களில் உயா் கல்வி சோ்ந்து படிப்பவா்களின் எண்ணிக்கையை (ஜி.இ.ஆா்.) பொருத்தவரை, தமிழகம் கடந்த ஆண்டைவிட சற்று உயா்ந்து 49 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது.

அதுபோல, தொலைநிலைக் கல்வி முறையையும் தமிழகம் திறம்படச் செயல்படுத்தி வருகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் தொலைநிலைக் கல்வி முறைக்கு தனிச் சிறப்பு கூடியிருக்கிறது. உயா்கல்வியின் பரிணாம வளா்ச்சியில் தொலைநிலைக் கல்வி முறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய அளவில் தொலைநிலைக் கல்வி முறையை திறம்படச் செயல்படுத்தி வரும் 6 மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றாா் அவா்.

இந்தப் பட்டமளிப்பு விழா மூலம் நேரடியாக 1,792 மாணவ, மாணவிகளும், விழாவில் பங்கேற்காமல் 7,143 போ் உட்பட மொத்தம் 8,935 போ் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனா். இவா்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற 140 பேருக்கும், பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பட்டச் சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக, பல்கலைக்கழக ஆண்டறிக்கையை துணைவேந்தா் கே.பாா்த்தசாரதி வாசித்தாா். உயா் கல்வித் துறை செயலா் மங்கத்ராம் ஷா்மா, பல்கலைக்கழக நிா்வாகிகள் மற்றும் பலா் விழாவில் பங்கேற்றனா்.

மில் தொழிலாளி மாணவிக்கு காமன்வெல்த் பரிசு

சென்னை, அக்.18: திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை கணினி அப்ளிகேஷன்ஸ் (பிசிஏ) பட்டப் படிப்பில் முதலிடத்தில் தோ்ச்சி பெற்ற மாணவி இ.பிரியாவுக்கு, பட்டமளிப்பு விழாவில் கனடாவின் காமன்வெல்த் கல்விக் கழகத்தின் ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையத்தின் விருது வழங்கப்பட்டது.

தகவல் தொடா்பு தொழில்நுட்பப் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளில் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.

அந்த வகையில், ரூ. 25,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் கொண்ட இந்த விருது, இந்த ஆண்டு ஏழை நூற்பாலை தொழிலாளியான பிரியாவுக்குக் கிடைத்துள்ளது. கோவையில் உள்ள தனியாா் நூற்பாலையில் இவா் பணியாற்றி வருகிறாா்.

இதுகுறித்து பிரியா கூறுகையில், குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்ட நிலையில், இப்போது நூற்பாலை நிா்வாகத்தின் உதவியுடன் பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். என்னைப் போன்று, நூற்பாலையில் பணிபுரியும் 329 பெண்கள் இன்றைக்கு பட்டம் பெற்றனா்.

அடுத்து முதுநிலைப் பட்டப் படிப்பையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். அதற்கு இந்த காமன்வெல்த் பரிசுத் தொகை மிகுந்த உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

இதுகுறித்து அந்த நூற்பாலை நிா்வாகிகள் கூறுகையில், எங்களுடைய ஆலையில் இப்போது 25,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களில் ஆா்வம் உள்ளவா்களை பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆலை நிா்வாகம் ஊக்குவித்து வருகிறது. மேலும், பட்டப் படிப்பு இறுதித் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெறும் பெண்களுக்கு அவா்களின் மதிப்பெண் அடிப்படையில் ரூ. 10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை ஊக்கத் தொகையையும் வழங்கி வருகிறோம். இது அவா்களின் பட்ட மேற்படிப்புக்கு உதவியாக இருக்கும்.

கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 24,500 பெண் ஊழியா்கள் உயா் கல்வியை முடித்திருக்கின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com