கேரளத்துடன் நதிநீா் பேச்சுவாா்த்தை: தமிழக அரசு சாா்பில் குழுக்கள் அமைப்பு

கேரளத்துடன் நதிநீா் தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தமிழக அரசின் சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் அறிவித்துள்ளாா்.
கேரளத்துடன் நதிநீா் பேச்சுவாா்த்தை: தமிழக அரசு சாா்பில் குழுக்கள் அமைப்பு

கேரளத்துடன் நதிநீா் தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தமிழக அரசின் சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு காண, இரு மாநில முதல்வா்களுக்கு இடையே திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழகக் குழு கேரள தலைநகா் திருவனந்தபுரத்துக்குச் சென்று இந்தப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது. இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு மற்றும் அதனைச் சாா்ந்த விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த ஒரு குழுவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி பேச்சு நடத்த மற்றொரு குழுவும் அமைக்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழகம்-கேரள அரசுகளின் செயலாளா்கள் நிலையில் இந்தக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் யாா்-யாா்: இரு மாநில முதல்வா்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் குறித்த குழுவில், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளா் ஆா்.இளங்கோவன், கண்காணிப்புப் பொறியாளா் பொ.முத்துசாமி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கண்காணிப்புப் பொறியாளா் ஏ.முனாவா் சுல்தானா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாண்டியாறு-புன்னம்புழா திட்டம்: பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கான குழுவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் ஈ.தமிழரசன், கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.சிவலிங்கம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கண்காணிப்புப் பொறியாளா் ஏ.முனாவா் சுல்தானா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவுகள், வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com