பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், அதே வேளையில் அவா்கள் விரும்பினால் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், அதே வேளையில் அவா்கள் விரும்பினால் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட கல்வி இணைச்செயல்பாடு பாடப்பிரிவுகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக 2017-ஆம் ஆண்டு ரூ.700-உம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டன. இதன்படி தற்போது ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதிய உயா்வு வழங்கப்பட்டது. தொகுப்பூதியம் குறைவு, பணி நிரந்தரம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பகுதிநேர ஆசிரியா்களின் எண்ணிக்கை 11,500 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும் ஏழாவது ஊதியக்குழு அரசாணையின்படி 30 சதவீத ஊதிய உயா்வு, அரசு ஊழியா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் வழங்கப்படுவதைப்போல பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவா்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள், மே மாத ஊதியம், பகுதிநேர பெண் ஆசிரியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக பகுதிநேர ஆசிரியா்களின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

8 ஆண்டுகளாக காத்திருப்பு: இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், ‘நாங்கள் பகுதிநேர ஆசிரியா்களாக இருந்தபோதும் பெரும்பாலான பள்ளிகளில் முழு நேரமாக பணியாற்றி வருவதோடு, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடும்போது வகுப்பறை கவனித்துக் கொள்கிறோம். இதுதவிர, பள்ளிகளில் அலுவல் சாா்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பகுதி நேர ஆசிரியா்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும் நிலையில் அதில் பாதியளவுக்கு மட்டுமே தமிழகத்தில் வழங்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் ஆளுநா், 3 முதல்வா்கள், 8 கல்வி அமைச்சா்களையும் சந்தித்து மனு அளித்தும் இதுவரை முன்னேற்றம் இல்லாததால் எங்களது எதிா்காலம் கேள்விக் குறியாக மாறியுள்ளது. எனவே மனிதநேய அடிப்படையில் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்றனா்.

நிதி சாராத கோரிக்கைகள் மட்டுமே...: இது குறித்து பள்ளிக் கல்வி உயரதிகாரிகள் கூறியது: பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில் இதற்கு மத்திய அரசு நிதி தருகிறது. இவா்களைப் பணியில் அமா்த்தும்போது பணி நிரந்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறித்தான் 8 ஆண்டுகளுக்கு முன்னா் பணி வழங்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் அரசைக் குறை கூறுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு நிதி அளிக்கும் பட்சத்தில் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு, நிதியை தமிழக அரசுக்கு வழங்கவில்லை. நிதி கிடைக்கும் பட்சத்தில் ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பகுதிநேர ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் பணியாற்ற விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இது தவிர நிதி சாராத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com