ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் : மு.க.ஸ்டாலின்

ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திண்ணை பிரசாரத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திண்ணை பிரசாரத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் காணை ஒன்றியத்துக்குட்பட்ட ஏழுசெம்பொன், கொசப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் குடிநீர், சுகாதாரம், நியாயவிலைக் கடை, குளம் தூர்வாருதல் தொடர்பான பிரச்னைகளுக்குக் கூட அதிமுக அரசு தீர்வு காண்பதில்லை. முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
நீட் தேர்வுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை உத்தரவு வாங்கினார். தற்போதைய முதல்வர் பழனிசாமி, மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காததால் ஹிந்தி மொழி திணிப்பு, நீட் தேர்வு போன்றவை தமிழகத்தில் வந்துள்ளன.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளதாக  முதல்வர் கூறுகிறார். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, ஊழல், முறைகேடுகள் தொடர்வதால், அதிமுக ஆட்சியை தரமான ஆட்சி எனக் கூற முடியவில்லை. 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில், பெண்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உள்ளாட்சிப் பதவிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடக்கம், திருமண நிதியுதவி போன்ற பல திட்டங்கள் வழங்கியதுடன், விவசாயிகளின் ரூ.7,000 கோடி கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளைக் கூறி வெற்றி பெற்றதாக முதல்வர் குறை கூறுகிறார். ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற முடியும் என்பதாலேயே அந்த வாக்குறுதிகளை அளித்தோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். வருகிற 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். ஆகவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
திறந்த வேனில் பிரசாரம்: திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, வெள்ளிக்கிழமை மாலை டி.புதுப்பாளையம், மேலக்கொந்தை, பனையபுரம், ராதாபுரம்,  சிந்தாமணி ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தது முந்தைய திமுக ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாகும். தற்போதைய அதிமுக ஆட்சியில் பொதுப் பணித் துறையில் ரூ.4,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதால், திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் விசாரித்து, முகாந்திரம் இருப்பதால் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது. ஆனால், தடை வாங்கி ஆட்சியாளர்கள் தப்பித்து விட்டனர்.
தமிழக கரும்பு விவசாயிகளுக்கான வட்டிக் கடனை தள்ளுபடி செய்ய முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், நாட்டில் உள்ள 230 பணக்காரர்கள் வாங்கிய ரூ.76 ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. இதை எதிர்த்து கேட்கவும் துணிவில்லாமல் தமிழக அரசு உள்ளது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக,  இடைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு அமைய வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
திண்ணை பிரசார கூட்டத்தில் மாணவர்கள்
ஏழுசெம்பொன் கிராமத்தில் நடைபெற்ற திண்ணை பிரசார கூட்டத்தில், அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் சீருடை அணிந்த நிலையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தேர்தல் பிரசார கூட்டத்தில் மாணவிகளை திமுகவினர் அழைத்து வந்திருந்தது விமர்சனத்துக்குள்ளானது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, ஏழுசெம்பொன் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கேசவனுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com