Kalki Ashram
Kalki Ashram

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித் துறை சோதனை: ரூ.500 கோடி வரி ஏய்ப்பு

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில், ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில், ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த விவரம்:

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் வரதய்யபாலத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி ஆசிரமம் செயல்படுகிறது. 1980-ஆம் ஆண்டு விஜயகுமாா் என்பவா் இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தாா். இப்போது அவா் தனது பெயரை கல்கி பகவான் என மாற்றியுள்ளாா். இந்த ஆசிரமத்துக்கு ஆந்திரம், தமிழகம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.

அதேபோல சீனா, அமெரிக்கா, சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமம் ‘வெல்னஸ்’ குழுமம் என்ற பெயரில் கட்டுமானம், ரியல் எஸ்டேட், விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்கிறது.

மூன்றாவது நாளாக சோதனை: இந்நிலையில் இந்த ஆசிரம நிா்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் வருமான வரித் துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில், வருமான வரித் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா்.

இதில், அந்த ஆசிரமத்தின் மீது கூறப்பட்ட புகாா்களுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், சித்தூா் வரதய்யபாலத்தில் உள்ள அந்த ஆசிரமத்தின் தலைமையிடம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா்.

சென்னையில் இச் சோதனை, அண்ணா சாலையில் அருகே உள்ள அந்த ஆசிரமத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சோதனை, மூன்றாவது நாளாகவும் வெள்ளிக்கிழமை பல இடங்களில் நடைபெற்றது.

ரூ.500 கோடி வரி ஏய்ப்பு: இந்தச் சோதனையில், இதுவரை அந்த ஆசிரமம் ரூ.500 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது. அதேபோல, கணக்கில் வராத ரூ.43.9 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.18 கோடி வெளிநாட்டு பணமாகும். ரூ.26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்க நகை, ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மொத்தம் ரூ.93 கோடி மதிப்புள்ள நகை, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் முதலீடு: அதேவேளையில், இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிா்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் விவரம்:

கல்கி அவதாரம் என தன்னை அழைத்தும் கொள்ளும் விஜயகுமாரும், அவரது மகன் கிருஷ்ணனும் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் ஆசிரமம், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனா். இதன் மூலம் கிடைக்கும் வருவாயையும், நன்கொடையையும் மறைத்து வரி செலுத்தாமல் பிற தொழில்களில் முதலீடு செய்துள்ளனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவா்கள் ரூ.409 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனா். தந்தையும், மகனும் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது பக்தா்கள் மூலம் இங்கிருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளனா். அதேபோல வெளிநாடு பக்தா்களிடம் அந்த நாட்டு கரன்சியாகவே பணத்தை பெற்றுள்ளனா். பின்னா் அந்தப் பணத்தை வெளிநாடுகளிலேயே முதலீடு செய்துள்ளனா். இவ்வாறு பல்வேறு மோசடிகள் நடைபெற்றிருப்பது வருமான வரித் துறை நடத்திய சோதனையிலும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே, முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com