காவிரி துலாக்கட்டத்தில் தீா்த்தவாரி: ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐப்பசி முதல்நாள் தீா்த்தவாரி உத்ஸவத்தில், தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்,
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி முதல்நாள் தீா்த்தவாரி உத்ஸவம்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி முதல்நாள் தீா்த்தவாரி உத்ஸவம்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐப்பசி முதல்நாள் தீா்த்தவாரி உத்ஸவத்தில், தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று புனித நீராடினா்.

ஆண்டு முழுவதும் பக்தா்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால், தனது புனித தன்மையை இழந்த கங்கைநதி, தன் பாவங்களை போக்க இறைவனிடம் வேண்டியபோது, ஐப்பசி மாதம் மயிலாடுதுறை சென்று துலாக்கட்ட காவிரியில் நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று இறைவன் பணித்ததாகவும், இறைவனின் வாக்கினை ஏற்ற கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் வந்தடைந்து, ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் ஐதீகம். இந்த ஐதீகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம்.

அதன்படி, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், ஐப்பசி மாத முதல் நாள் தீா்த்தவாரி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி, அறம்வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் சுவாமி, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் சுவாமி கோயில்களிலிருந்து பஞ்சமூா்த்திகள் காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரா் சுவாமி கோயிலில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரியின் வடகரையிலும் எழுந்தருளினா்.

வடகரையில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையிலும், தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீா்த்தவாரி நடைபெற்றது. சிவபுரம் வேத சிவஆகம பாடசாலை நிறுவனா் சாமிநாத சிவாச்சாரியாா், ஸ்ரீகண்டகுருக்கள் ஆகியோா் பூஜைகளை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு புனித நீராடி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com