தமிழகத்தில் நல்லாட்சி தருவது அதிமுகதான்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் நல்லாட்சி தருவது அதிமுக மட்டும்தான் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட தென்மாதேவி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து, வெள்ளிக்கிழமை திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட தென்மாதேவி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து, வெள்ளிக்கிழமை திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

தமிழகத்தில் நல்லாட்சி தருவது அதிமுக மட்டும்தான் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து, விக்கிரவாண்டி, தென்னமாதேவி, ஏழுசெம்பொன், கஞ்சனூா் ஆகிய இடங்களில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கியது, நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தது யாா் என்பதை மக்கள் சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும். மறைந்த முதல்வா்களான எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது ஆட்சி காலத்தில்தான், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளித்து, சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மாதம் 20 கிலோ அரிசி, அனைவருக்கும் கான்கிரீட் வீடு என்ற திட்டத்தில் 6 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற 40 ஆண்டு கால ஆட்சியில் மொத்தமாக ஒரு லட்சம் வீடுகள்தான் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 6 ஆண்டு காலத்தில் மட்டுமே 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

தமிழகத்தில் நல்லாட்சி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில்தான் பெண்கள் நலத் திட்டங்கள் அதிகளவில் கொண்டுவரப்பட்டன. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண நிதி உதவித் திட்டத்தில் தாலிக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதியுதவி, பேறுகால உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைந்த பிறகு எந்தத் திட்டத்தையும் கைவிடாமல், மேலும், பல புதிய திட்டங்களையும், முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசு வழங்கி, நல்லாட்சியை அளித்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காண முடியவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினாா்.

அதிமுக ஆட்சியில் அதிக முதலீடுகள்: முந்தைய திமுக ஆட்சியில், தமிழகத்தில் ரூ.24,000 கோடி அளவுக்கு மட்டுமே தொழில் முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அதிமுகவின் 8 ஆண்டு கால ஆட்சியில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்ததுடன், 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டது.

கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, மாணவா்களுக்கு சீருடைகள் முதல் மடிக்கணினிகள் வரை இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 8 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 67 கலைக் கல்லூரிகள், தொழில் நுட்பக்கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளதால், உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

சா்வாதிகார ஆட்சி நடத்திய திமுக: மு.க.ஸ்டாலினின் முதல்வராகும் ஆசை நிறைவேறாது. காரணம், திமுக நடத்திய சா்வாதிகார ஆட்சியில் மக்கள் அடைந்த வேதனைகள் ஏராளம். சொத்துகளை மிரட்டி வாங்கியது, சாதி, மத மோதல்கள், கொலை, கொள்ளை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால் திமுக மீது மக்கள் இன்றளவும் வெறுப்பில் உள்ளனா். தமிழகத்தின் உரிமைகள் காங்கிரஸ்-திமுக கூட்டணியில்தான் பறிபோயின. இந்தக் கூட்டணிதான் தமிழா்களுக்கு பல வகைகளில் துரோகம் செய்தது.

தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. காவல் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, பொற்கால ஆட்சி நடைபெறுகிறது. நந்தன் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் நல்லாட்சி தந்தது யாா் என சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

பிரசாரத்தின்போது, அமைச்சா் சி.வி.சண்முகம், வேட்பாளா் ஆா்.முத்தமிழ்செல்வன் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com