திமுக கட்சியல்ல;கார்ப்பரேட் நிறுவனம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

திமுக கட்சியல்ல; கார்ப்பரேட் நிறுவனம் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
நான்குனேரி தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
நான்குனேரி தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


திமுக கட்சியல்ல; கார்ப்பரேட் நிறுவனம் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெ.நாராயணனுக்கு ஆதரவாக முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி. நகர் சீவலப்பேரி பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான்குனேரி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். ஹெச்.வசந்தகுமார் உயர்பதவிக்கு ஆசைப்பட்டு வாக்களித்த மக்களை ஏமாற்றி சென்றுவிட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள், இப்போது அவருடைய மரணம் குறித்து கேள்வியெழுப்பி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் விஷமத்தனமான பொய் பிரசாரத்தை செய்கிறார். ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர்களை அவருடைய ஆன்மா மன்னிக்காது. ஜெயலலிதா மரணம் பற்றி பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை 2 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த ஸ்டாலின், அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. 
நீட் விவகாரத்தில் வீண் பழி: நீட் தேர்வு விவகாரத்தில் தவறான தகவல்களைக் கூறுகிறார்கள். நீட் தேர்வைக் கொண்டுவந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும் அதிமுக அரசு. ஆனால், நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். ஆனால், இப்போது மக்களைக் குழப்பி தேர்தல் ஆதாயம் அடைய அதிமுக மீது வீண் பழி சுமத்த நினைக்கிறார்கள்.
1989-இல் அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது  தாக்குதல் நடத்திய திமுகவுக்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லாததாலும்,  மின்சார தட்டுப்பாடு போன்ற காரணங்களாலும் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் அஞ்சின. ஆனால், அதிமுக அரசு 2019, ஜனவரி மாதத்தில் நடத்திய தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 436 கோடி முதலீட்டில் 304 புதிய தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தலா 5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதுபோன்ற ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில் அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்.
உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் சிறந்து விளங்குகிறது. தேர்தல் முடிந்ததும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 5 லட்சம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். 
முதல்வராக வேண்டுமென ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். திமுகவில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கும். திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். பாஜகவின் பினாமி ஆட்சி அதிமுக என ஸ்டாலின் பேசி வருகிறார். அரசு எப்படி பினாமி அரசாக இருக்க முடியும்? இப்போது அதிமுகவை பினாமி ஆட்சி எனக் கூறும் ஸ்டாலின், 5 ஆண்டு காலம் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து பதவியில் இருந்ததை மறுக்க முடியுமா?
நான்குனேரி இடைத்தேர்தல் வெற்றி 2021 சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக அமையும் என்றார் அவர்.
பொதுக்கூட்டம்: பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: இருநாட்டு தலைவர்கள் மாமல்லபுரத்தில் மரத்தடியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதற்கு சான்று.
அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவை அதிமுக அரசு அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி, மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களைத் தூண்டிவிட்டு எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முயன்றது,திமுக. ஆனால், அரசு ஊழியர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றார் முதல்வர்.
பிரசாரத்தின்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார்,  வி.எம்.ராஜலெட்சுமி, மாநிலங்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம்,  மூத்த நிர்வாகிகள் பொன்னையன், ஜக்கையன், தமிழ்மகன் உசேன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி,  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com