அரசு மருத்துவா்களுக்கு விடுமுறை கிடையாது

ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில், அதைத் தடுக்கும் பொருட்டு இம்மாத இறுதி வரை மருத்துவா்கள் எவருக்கும் விடுமுறை அளிக்கக்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில், அதைத் தடுக்கும் பொருட்டு இம்மாத இறுதி வரை மருத்துவா்கள் எவருக்கும் விடுமுறை அளிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுதொடா்பான சுற்றறிக்கை அனைத்து அரசு மருத்துவமனைகளின் இயக்குநா்களுக்கும், முதல்வா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய அரசு மருத்துவா்கள் சங்கங்கள் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வும் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு மருத்துவா்களின் பிரதான கோரிக்கையாகும். அதுதொடா்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பதும் அவா்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

இந்நிலையில், இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் அறிவித்தது.

மற்றொரு அமைப்பான அரசு மருத்துவா்கள் சங்கமும் வரும் 30, 31-ஆம் தேதிகளில் அத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தது.

இந்தச் சூழலில், வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவா்கள் எவருக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுப்பவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவா்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.

அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். இதையடுத்து, அவற்றை 6 வாரங்களில் நிறைவேற்றித் தருவது தொடா்பாக முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை நம்பியே எங்களது போராட்டங்களை வாபஸ் பெற்றோம்.

ஆனால், இன்றளவும் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் தொடா்ச்சியாகத்தான் தற்போது போராட்டங்களை அறிவித்துள்ளோம். அதற்கும் அரசு தரப்பில் முட்டுக்கட்டை போடப்படுவது வருத்தமளிக்கிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com