தமிழகம் முழுவதும் ரூ.895 கோடியில் தரம் உயர்த்தப்படும் கிராமச் சாலைகள்!

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் உள்ள 1,267 கி.மீ. தொலைவுள்ள கிராமச் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறை வசம் மாற்றப்படவுள்ளது. 
தமிழகம் முழுவதும் ரூ.895 கோடியில் தரம் உயர்த்தப்படும் கிராமச் சாலைகள்!


திருச்சி: தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் உள்ள 1,267 கி.மீ. தொலைவுள்ள கிராமச் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறை வசம் மாற்றப்படவுள்ளது. இதற்காக ரூ.895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள, கிராமச் சாலைகள், மாவட்ட ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து தரம் உயர்த்தி பெருநகரங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தவும், கிராம மக்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர போக்குவரத்து வசதி செய்துதரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2019-20ஆம் ஆண்டுக்கு தமிழகத்தில் மொத்தம் 27 மாவட்டங்களை தேர்வு செய்து 1,267.99 கி.மீ. தொலைவுள்ள சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் 1,456 கி.மீ. கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைதுறை வசம் ஒப்படைத்து மேம்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இப்போது அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக 1,267 கி.மீ. தொலைவுள்ள சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் தென்னூர்-வேம்பனூர் சாலை, நகர்-மகிழம்பாடி சாலை, அன்பில்-திண்ணியம் சாலை, துடையூர்-பாண்டியபுரம் சாலை, ஆரியாவூர்-அரவங்கல்பட்டி சாலை, எட்டரை-போசம்பட்டி சாலை, வேங்கைகுறிச்சி-முகவனூர் சாலை, மருவத்தூர்-கிருஷ்ணாபுரம் சாலைகள் 41 கி.மீ. தொலைவுக்கு தரம் உயர்த்தப்படவுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர்-நாட்டார்மங்கலம் சாலை, மலையாளப்பட்டி-கொட்டரக்குன்று சாலை, நூத்தாப்பூர்-கல்கலாத்தூர் சாலை, பிள்ளையார்புரம்-தொண்டமாந்துரை, ஜிஎஸ்டி-விஆர்எஸ்எஸ் புரம் சாலை, சாத்தனூர்-இலுப்பக்குடி சாலை, மலையப்பநகர் சாலை என 21 கி.மீ தொலைவுக்கு தரம் உயர்த்தப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் டி.சி.சாலை-கருவேடச்சேரி சாலை, பளிங்காநத்தம்-தங்கசாலை, சின்னவலையம்-பிச்சனூர் சாலை, உதிரக்குடி-தேவமங்கலம் சாலை, உட்கோட்டை-ஜெயங்கொண்டம் சாலை, கடாரங்கொண்டான்-பெரியவலம் சாலை, மணக்கரை-பிரான்சேரி சாலை, ஆலாத்தியூர்-கோட்டைக்காடு சாலை, நாமகுணம்-துங்காபுரம் சாலை, செந்துரை-உடையார்பாளையம் சாலை என 38 கி.மீ. தொலைவுக்கு தரம் உயர்த்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎஸ்கே சாலை-குளவிப்பட்டி சாலை, ராஜகிரி-கூத்தாண்டம்மன் சாலை, வடுகப்பட்டி சாலை, வெள்ளாளப்பட்டி-எச்சங்குடி சாலை, குடுமியான்மலை-அன்னவாசல் சாலை, ஊரப்பட்டி-கட்டயக்கோன்பட்டி சாலை, வெள்ளனூர், கீழமுத்துடையான்பட்டி, புதுப்பட்டி, வன்னியம்பட்டி, கருப்பட்டிபட்டி, மலையூர், துருசுப்பட்டி, திருநல்லூர்-ஆலங்குளம் சாலை என 64 கி.மீ. தொலைவுக்கு தரம் உயர்த்தப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 64 கி.மீ., கரூர் மாவட்டத்தில் 43 கி.மீ., திருவாரூர் மாவட்டத்தில் 10 கி.மீ., நாகப்பட்டினத்தில் 43 கி.மீ., காஞ்சிபுரத்தில் 56 கி.மீ., திருவள்ளூரில் 46 கி.மீ., கடலூரில் 32 கி.மீ., திருவண்ணாமலையில் 41 கி.மீ., சேலத்தில் 79, நாமக்கல்லில் 22, தருமபுரியில் 77, கிருஷ்ணகிரியில் 32, ஈரோட்டில் 60, திருப்பூரில் 52, கோவையில் 56, உதகையில் 13, மதுரையில் 62, தேனியில் 2, தூத்துக்குடியில் 45, கன்னியாகுமரியில் 7, ராமநாதபுரத்தில் 88, விருதுநகரில் 51, சிவகங்கையில் 111 கி.மீ., என மொத்தம் 1,268 கி.மீ. தொலைவுக்கு 484 சாலைகள் தரம் உயர்த்தப்படுகின்றன.

இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

கிராமச் சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வருவதால் நெடுஞ்சாலைத்துறையை போல தொடர் பராமரிப்புக்குள் வருவதில்லை. 

இப்போது, கிராமச் சாலைகளை தரம் உயர்த்தி நெடுஞ்சாலைத்துறை வசம் கொண்டு வருவதன் மூலம் தரமான சாலைகள் கிடைக்கும். அரை அடி உயரத்துக்கு ஜல்லிகள் அடித்து, 2 அடுக்கு தார்ப்பூச்சு மூலம் சாலை அமைப்பதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம். 

சாலைப் பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மூலம் சாலைகளை தொடர்ந்து கண்காணித்து சாலைகளின் இருபுறமும் முட்புதர்கள் அவ்வப்போது அகற்றப்படும். 

சாலைகளில் பள்ளம், குழிகள் ஏற்பட்டால் பேட்ஜ் ஒர்க் எனும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இதுமட்டுமல்லாது நகரங்களுக்கான இணைப்புச்சாலையாக மாறுவதால் கிராமங்களில் இருந்து வேளாண் பொருள்கள் விரைந்து நகரங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். கிராம மக்களுக்கான போக்குவரத்து வசதியும் அதிகரிக்கும் என்றார்.

5 ஆண்டுகளில் 5,000 கி.மீ. இலக்கு!

அதிமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் கி.மீ. தொலைவுள்ள கிராமச் சாலைகளை தரம் உயர்த்தி நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நிகழாண்டுடன் சேர்த்து கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் கி.மீ. மேலான கிராமச் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு நெடுஞ்சாலை வசம் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள சாலைகளையும் தரம் உயர்த்தி சிறுநகரம், பெருநகரம், மாநகரம் ஆகியவற்றுக்கு இணைப்பு ஏற்படுத்தி கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com