கல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறை சோதனை நிறைவு: ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில், ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, அங்கிருந்து 90 கிலோ தங்க நகைகள்,
கோப்புப் படம்
கோப்புப் படம்


விசாரணைக்கு ஜராகுமாறு அழைப்பாணை
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில், ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, அங்கிருந்து 90 கிலோ தங்க நகைகள், ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்படுகிறது.  1980-ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர்  ஆரம்பித்தார். அப்போது அவர் தனது பெயரை கல்கி பகவான் என மாற்றினார். இந்த ஆசிரமத்துக்கு ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.
 அதேபோல சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமம் வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கட்டுமானம், ரியல் எஸ்டேட், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறது. வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிரம நிர்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
 இதில், அந்த ஆசிரமத்தின் மீது கூறப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.இதன் அடிப்படையில் சித்தூர் வரதய்யபாலத்தில் உள்ள அந்த ஆசிரமத்தின் தலைமையிடம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 400 பேர் கடந்த 16-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
 சென்னையில் இந்தச் சோதனை அண்ணா சாலை அருகே உள்ள அந்த ஆசிரமத்தின் அலுவலகத்திலும், சூளைமேட்டில் உள்ள விஜயகுமார் என்ற கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா வீட்டிலும் நடைபெற்றது. ஆறு நாள்களாக நடைபெற்ற இந்தச் சோதனை ஞாயிற்றுக்கிழமை அனைத்து இடங்களிலும் நிறைவு பெற்றது.
4 ஆயிரம் ஏக்கர் நிலம்: இந்தச் சோதனையில், இது வரை அந்த ஆசிரமம் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. அதேபோல கணக்கில் வராத ரூ.44 கோடி இந்தியப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகை, ரூ.20 கோடி வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெல்னஸ் குழுமம் தனது பெயரிலும், பினாமி பெயரிலும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பதும், துபை, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஹவாலா பணமாக ரூ.100 கோடி முதலீடு செய்திருப்பதும் வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அழைப்பாணை: இது தொடர்பாக வருமானவரித் துறையினர், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவர் மனைவி ப்ரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று வருமான வரித் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சோதனையில் கிடைத்த பணம், நகை, ஆவணங்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கிருஷ்ணா, ப்ரீத்தா மற்றும் வெல்னஸ் குழும நிர்வாகிகளுக்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு ஆஜராவார்கள் என வருமானவரித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.       
இதற்கிடையே கிருஷ்ணா, ப்ரீத்தா ஆகிய இருவரும்  உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அருகே பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை இரவு தகவல் வெளியானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com