தமிழ்ப் படைப்புகள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும்: புதுவைப் பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங்

புதுவை மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் படைப்புகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்தார்.
விழாவில் கணவதி அம்மாளின் படத்தைத் திறந்துவைக்கிறார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன். உடன் புதுவைப் பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், எழுத்தாளர் கி.ரா., நடிகர் சிவக்குமார்,
விழாவில் கணவதி அம்மாளின் படத்தைத் திறந்துவைக்கிறார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன். உடன் புதுவைப் பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், எழுத்தாளர் கி.ரா., நடிகர் சிவக்குமார்,


புதுவை மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் படைப்புகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்தார்.
கி.ரா. என்று தமிழ் வாசகர்களால் அழைக்கப்படும் கி. ராஜநாராயணனின் துணைவியார் கணவதி அம்மாளின் படத் திறப்பு விழா புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் புலத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், கி.ராஜநாராயணன், நடிகர் சிவக்குமார், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், புல முதன்மையர் க.இளமதி சானகிராமன், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கணவதி அம்மாளின் படத்தை பழ.நெடுமாறன் திறந்துவைத்தார்.
விழாவில் துணைவேந்தர் குர்மீத் சிங் பேசியதாவது: உலகில் மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழ் மொழியில் உள்ள சிறந்த படைப்புகள் ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை விரைவில் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என்றார் அவர்.
நடிகர் சிவக்குமார் பேசியதாவது: ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஐம்பதாவது வயதைக் கடக்கையில் இரண்டாம் தாயாக தன்னுடைய மனைவியைக் கருத வேண்டும்.  கி.ரா.வை ஒரு குழந்தையைப் போல பாவித்து, அவரைக் காப்பாற்றியவர் கணவதி அம்மாள். புராணத்தில் இடம் பெற்ற சத்தியவான் சாவித்திரி, கண்ணகி, நளாயினி போன்று வாழ்ந்து காட்டியவர் கணவதி அம்மாள். சரித்திரத்தில் இடம் பெற்ற ஜென்னி மார்க்சின் தியாகத்துக்குச் சற்றும் குறையாதது அவரது தியாகம்  என்றார் அவர்.
பழ.நெடுமாறன் பேசியதாவது: கி.ரா.வின் எழுத்தாற்றல் ஒப்பற்றது. துணைவியாரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதல் கூற உண்மையில் என்னிடம் வார்த்தைகளே இல்லை. தமிழ்ச் சமூகத்துக்கு கி.ரா.வின் எழுத்துகள் என்றைக்கும் தேவை என்றார் அவர்.
கி.ரா.வின் குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை நினைவு கூர்ந்து வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார். 
விழாவில் கி.ரா. ஏற்புரையாற்றினார்.விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழியல் புலப் பேராசிரியர் பா.ரவிக்குமார் செய்திருந்தார்.
விழாவில் புல முதன்மையர் க.இளமதி சானகிராமன், பா. செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், வெங்கடசுப்புராய நாயகர், நெல்லை சாந்தி, கவிஞர்.சேஷாசலம், பக்தவத்சல பாரதி, சிலம்பு நா.செல்வராசு, சம்பத், கி.ரா.வின் புதல்வர் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். சீனு.தமிழ்மணி, தமிழ்மொழி, அமரநாதன், புதுவை இளவேனில், பி.என்.எஸ். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கி.ரா.வின் புதல்வர் பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com