டெங்குவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது: அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தேசிய அளவில் மிகப் பெரிய சவாலான பணியாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.
டெங்குவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது: அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்


டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தேசிய அளவில் மிகப் பெரிய சவாலான பணியாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்தார். 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவ காலங்களில் பரவும் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. 
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க அனுபவம் நிறைந்த மருத்துவர்களும், துறைசார் நிபுணர்களும் உள்ளனர். டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஆனால், பெற்றோர்கள் அதற்கு உரிய ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே  சாத்தியமாகும்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால், நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது சவால் நிறைந்த பணியாக உள்ளது. இருப்பினும், அதனை சாத்தியப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். 
நிகழாண்டில், தமிழகம் முழுவதும் இதுவரை 3,900  பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 3 பேர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
எனவே, டெங்கு குறித்து மக்களிடம் அச்சத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றார் அவர்.
ஆய்வின்போது, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com