பொது சுகாதார இதழியல்: மருத்துவப் பல்கலை.யில் புதிய பட்டயப் படிப்பு அறிமுகம்

பொது சுகாதார இதழியல் தொடர்பான புதிய பட்டயப் படிப்பை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


பொது சுகாதார இதழியல் தொடர்பான புதிய பட்டயப் படிப்பை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓராண்டு கால படிப்புக்கான மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தொடங்கியுள்ளன. மொத்தம் 8 இடங்கள் அதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடையே அப்படிப்புக்கு இருக்கும் வரவேற்பைப் பொருத்து, அடுத்து வரும் ஆண்டுகளில் இடங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அப்படிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மூத்த பத்திரிகையாளரும், அந்தப் பட்டயப் படிப்பின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான மாலன், பட்டயப் படிப்பின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது: இதழியல் என்பது சமூகத்துக்குப் பங்களிக்கும் அதிமுக்கியப் பணிகளில் ஒன்று; இதழியல் குறித்து பல்வேறு படிப்புகள் உள்ளன. ஆனால், மருத்துவம் சார் இதழியல் தொடர்பாக பிரத்யேக படிப்புகள் பெரிய அளவில் இல்லை.
மருத்துவத் துறையில் உள்ள ஒரு சொல்லை மாற்றி எழுதினால்கூட அதன் பொருளும், புரிதலும் மாறிவிடும். எனவே, மருத்துவம் சார்ந்த விஷயங்களை நாளிதழ்களிலும் இதழ்களிலும் செய்திகளாக வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு அதை முறையாகக் கற்றுணர ஒரு படிப்பு அவசியமாகிறது. அதைக் கருத்தில்கொண்டே முதுநிலை பொது சுகாதார இதழியல் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியது:
முதுநிலை பொது சுகாதார இதழியல் பட்டயப் படிப்பைப் பொருத்தவரை மொத்தம் 3 தாள்கள் இடம்பெறவிருக்கின்றன. அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளநிலை பட்டப் படிப்புடன் ஆறு மாத கால இதழியல் அனுபவம் கொண்டவர்கள் அந்தப் படிப்பில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 6-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றார் அவர்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை
மருத்துவக் கல்லூரி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக  துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
தேர்வில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எழுத அனுமதித்ததாக 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்  அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தங்களது வளாகத்தில் தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சுதா சேஷய்யன், முறைகேட்டைத் தடுக்க கண்காணிப்பை  தீவிரப்படுத்த உள்ளதாகவும், கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com