
இந்துசமய அறநிலையத்துறை சட்டப்படி உறுதிமொழி எடுக்காத ஆணையர் உள்ளிட்ட பிற அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்துசமய அறநிலையத் துறை சட்டப்படி அந்த துறையின் ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பணியில் சேரும் முன்பாக அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, தான் இந்து மதத்தில் பிறந்தவர் எனவும், இந்து மதத்தைத் தொடர்ந்து பின்பற்றுவேன் என உறுதிமொழி எடுத்து அதன்பின்னர் அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த துறையில் இந்துவாக இல்லாதவர்கள் பதவி வகிக்க முடியாது. ஆனால் இந்த சட்டத்தின்படி தற்போதுள்ள அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் உறுதிமொழி ஏற்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் கீழ் தெரியவந்துள்ளது. எனவே அறநிலையத் துறை சட்டத்தின்படி யாரெல்லாம் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவில்லையோ அவர்களை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அறநிலையத் துறையில் அதிகாரிகள் யாரும் சட்டப்படியான உறுதிமொழி ஏற்பது இல்லை எனக்கூறி வாதிட்டார். அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் மகாராஜா, அறநிலையத் துறை பணியில் சேரும்போது இந்துவாக இருக்க வேண்டும் என்ற விதி கோயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உறுதிமொழி சட்டம் பொருந்தாது எனக்கூறி வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக இந்துசமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.