
கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட மூன்று பேரும் நவம்பர்
18-ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி ஆஜராகவில்லை. முருகன், கருப்பசாமி இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பரிமளா, மூன்று பேரும் நவம்பர் 18-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். அன்று முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.