
காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதிக்கு அருள்மிகு அத்திவரதர் சிறப்புப் பணிக்கான பதக்கம் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் தலைமைச் செயலாளர் க. சண்முகம்
தமிழகத்தில் காவல் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டுமென உயரதிகாரிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதல்வரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:
காவல் துறையின் செயல் திறன் சிறக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளும், காவலர்களின் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக காவல் துறையினர், தங்களது சிறப்பான செயல்பாடுகளால் வரவுள்ள பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மாநிலத்தில் பொது அமைதியை பேணிக் காத்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து வருவதுடன், குற்ற வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தந்தும் வருகின்றனர். இதனால், தமிழகத்தில் பெரும்பாலான குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
பிரதமர் மோடி - சீன அதிபர் பாராட்டு: இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. மிகப்பெரிய தலைவரான சீன அதிபர் மாமல்லபுரத்துக்கு சாலை வழியாகச் செல்ல பாதுகாப்பு வழங்குவது ஒரு சவாலான விஷயமாகும்.
அதை நமது காவல் துறை தங்களுக்கே இயல்பாக உள்ள அனுபவத்தாலும், செயல் திறனாலும் சிறப்பாகச் செய்து வெற்றி கண்டனர். காவல் துறையினர் வகுத்து வைத்திருந்த பாதுகாப்பு வியூகங்களையும், திறமைகளையும் கண்டு சீன அதிகாரிகள் வியந்து போயினர். இது காவல் துறையின் சிறப்பான பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டுச் சான்றாகும்.
கண்காணிப்பை மேம்படுத்துங்கள்: சென்னையிலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் குற்றங்கள் நடைபெறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி, தமிழகத்தில் காவல் கண்காணிப்பை காவல் துறை உயரதிகாரிகள் மேலும் மேம்படுத்த வேண்டும்.
திமுகவுக்கு பதில்: தமிழக காவல் துறையினர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தீவிரவாத இயக்கங்கள், இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோதச் செயல்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. இதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில் தவறு உள்ளதாக அவர் கூறுவது சரியானதல்ல. ஏற்கெனவே கொள்கை
விளக்கக் குறிப்பில் தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவை.
தமிழக காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விரைவில் அந்தப் பணிகள் முடிந்து, காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதன்மூலம் காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு காவல் துறையினர் மேலும் சிறப்பாகப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், தமிழக காவல் துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி வரவேற்றுப் பேசினார். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நன்றி தெரிவித்தார்.
இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, முன்னாள் டிஜிபியும் எம்.எல்.ஏ.வுமான ஆர்.நடராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
டிஜிபி முதல் காவலர்கள் வரை அத்திவரதர் பதக்கங்கள்
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்தியதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி முதல் காவலர்கள் வரை நூற்றுக்கணக்கானோருக்கு அத்திவரதர் பதக்கங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான விழா, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் காவல் நிலையிலான அலுவலர்கள் வரை அத்திவரதர் திருவிழாப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஐ.பி.எஸ். உள்பட முக்கிய நிலையிலான அதிகாரிகளுக்கு முதல்வர் வழங்கினார். இதன்பின்பு, உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலருக்கும், காவல் துறை இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள் வழங்கினர்.
விழாவில், அத்திவரதர் வைபவம் குறித்துப் பேசிய முதல்வர், 48 நாள்கள் இரவு-பகல், வெயில்-மழை பாராமல் பக்தர்களை கனிவாகவும், பரிவோடும் அணுகி பத்கர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசித்துச் செல்ல காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பணியாற்றியது. அதனுடன், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் என பல்வேறு துறையினரும் பணியாற்றினர். இந்தப் பணிக்காக ஏற்கெனவே 28 ஆயிரம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளேன் என்றார் முதல்வர் பழனிசாமி.