
திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி ஆகியவற்றில் இருந்து பாசனத்துக்காக நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டு முதல் போக பாசனத்துக்காக நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனவே, வரும் 25-ஆம் தேதி முதல் 130 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், பழனி வட்டத்திலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதேபோன்று, வரதமாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக வரும் 25-ஆம் தேதி முதல் 127 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5 ஆயிரத்து 523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.