
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட்அவுட் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்ல விழாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது.
இதனையடுத்து நிலை தடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சட்டவிரோத பேனர் விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, காவல்துறை, சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது.
மேலும் இடைக்கால நிவாரணமாக சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தது. மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி தமிழக அரசிடம் ரூ.1 கோடி இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சுபஸ்ரீயின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இறுதி விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதியன்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது என கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளனர். ஆர்வ மிகுதியின் காரணமாகக்கூட தொண்டர்கள், அவர்களது இல்லங்களில் நடைபெறும் விழாவுக்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என கட்சியின் தலைமைக் கழகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் மரணத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கே.வி.முத்துவிசாகன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.