
பேராசிரியர் காலிப் பணியிடங்களை தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு காலிப் பணியிடங்களை நிரப்பாத கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தரமான உயர்கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி எடுத்து வருகிறது. அதற்காக, பேராசிரியர் பணியிடத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை யுஜிசி அண்மையில் மாற்றியமைத்தது.
அதன்படி, முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.
அடுத்ததாக, பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பவும், அவ்வாறு பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கிய 6 மாத காலத்துக்குள்ளாக முடிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியிருந்தது.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பேராசிரியர் காலிப் பணியிட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு யுஜிசி அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இப்போது, பேராசிரியர் காலிப் பணியிடங்களை உரிய தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தகுதியுள்ள பேராசிரியர்களின் பற்றாக்குறை உயர் கல்வி நிறுவனங்களின் நிலையை மிகவும் மோசமடையச் செய்துள்ளது. எனவே, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உடனடித் தேவையாக உருவெடுத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்புக் கல்லூரிகளும் பேராசிரியர் காலிப் பணியிடங்களை தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை www.ugc.ac.in/uamp என்ற பல்கலைக்கழக நடவடிக்கை கண்காணிப்பு இணையதளத்தில் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறின்றி, பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தாமதப்படுத்தும் உயர் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் யுஜிசி எச்சரித்துள்ளது.