
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய சரித்திரம் உருவாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: காந்தியின் 150 -ஆவது பிறந்த நாளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடி வருகின்றனர். பாஜக சார்பில் காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில், மது ஒழிப்பு, மரம் வளர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சீனப் பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ தண்டனைக்குரிய குற்றமாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான பாட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் வளம் பெறுகிறது.
பஞ்சமி நிலத்தை முரசொலி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் என்றாலும் அதற்குரிய விளக்கத்தைக் கேட்க வேண்டும். இதேபோல, பஞ்சமி நிலங்களை யாராவது அபகரித்து இருந்தாலும், விலைக்கு வாங்கி இருந்தாலும் அதையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஜினிகாந்த் பாஜகவுடன் சேர்ந்தாலோ, தனி கட்சியைத் தொடங்கினாலோ மற்ற கட்சிகள் அழிந்துவிடும். இதனால்தான் அவரைப் பற்றி விமர்சிக்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய அரசியல் சரித்திரம் உருவாகும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்படும். காந்தியின் 150 -ஆவது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மது இல்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண்டும். ஒரு சொட்டு மது கூட விற்கப்படவில்லை என்ற சரித்திரம் படைக்க வேண்டும். இதற்காக 26 -ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றார்.