
வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்திக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புதிதாக கட்சி தொடங்கிய 14 மாதங்களில், மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் நின்று, அனைவரும் பாராட்டும் வகையில், மக்களின் ஆதரவினைப் பெற்றது, அனைவருக்கும் உற்சாகத்தை அளித்தது.
அதே சமயம், தமிழக அரசியலை மாற்றியமைக்க, வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கான உண்மையான, நேர்மையான அரசு அமைந்திட, இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் செயல்வீரர்கள் நேரடியாக களத்தில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக கட்சி கூட்டமைப்பு விரிவுபடுத்தப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார். அதன்படி மாநிலப் பொதுச் செயலாளர்களாக அருணாசலம், ஏ.ஜி.மெளர்யா, குமரவேல், செளரிராஜன், உமாதேவி ஆகியோரும், மாநிலச் செயலாளர்களாக முரளி அப்பாஸ், சுஹாசினி கந்தசாமி, கிருபாகரன், காந்தி கண்ணதாசன், சத்தியமூர்த்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.