
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை 3.71 கோடி பேர் விவரங்களைச் சரிபார்த்துள்ளனர். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 5.51 லட்சம் வாக்காளர்கள் முழுமையான அளவில் விவரங்களை சரிபார்த்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளர்களே இணையதளம், செயலி உள்ளிட்டவை மூலமாக சரிபார்த்துக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது, இன்னும் ஒரு மாதம் நடைமுறையில் இருக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டமானது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்காளர்களும் தங்களது விவரங்களை சரிபார்த்து விட்டனர்.
அதன்படி, அங்குள்ள 5,51,932 வாக்காளர்களில் அனைவரும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ் விவரங்களை சரிபார்த்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதற்கு அடுத்தபடியாக, அரியலூரில் 97.77 சதவீதமும் (4.96 லட்சம் பேர்), ஈரோட்டில் 92.45 சதவீதமும் (17.46 லட்சம் பேர்) வாக்காளர்கள் தங்களது விவரங்களைச் சரிபார்த்துள்ளனர். நான்கு மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18,21,501 வாக்காளர்கள், அதாவது 48.26 சதவீதம் பேரும், நாகப்பட்டினத்தில் 47.18 சதவீத வாக்காளர்களும் (6,04,556), மதுரையில் 45.84 சதவீத வாக்காளர்களும் (11.89 லட்சம்), சென்னையில் மிகக் குறைந்தபட்சமாக 18.53 சதவீத வாக்காளர்களும் (7.19 லட்சம் பேர்) தங்களது விவரங்களைச் சரிபார்த்துள்ளனர்.
மொத்தம் எவ்வளவு? : தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 913 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 3 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 646 வாக்காளர்கள் தங்களது விவரங்களைச் சரிபார்த்துள்ளனர். இது 61.87 சதவீதமாகும்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டமானது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதால், குறைவாக உள்ள மாவட்டங்களில் சரிபார்ப்புப் பணிகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நம்பிக்கை தெரிவித்தார்.