
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழ சேர்வையில் 15 செ.மீ மழையும், மதுரை மாவட்டம் விரகனூர் மற்றும் பாம்பனில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.