ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.


ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். அந்தப் பேருந்துகளில் இடவசதி இல்லாத காரணத்தால்  ஆம்னி பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏறத்தாழ சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து சேலத்துக்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்துக்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்படுகிறது. 
ஆனால், அதே பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1,570 வசூலிக்கப்படுகிறது. இது 214 சதவீதம் அதிகமாகும். இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து, தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன். தனியார் ஆம்னி பேருந்துகளைப் பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து  ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையைத்  தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com