ரயில்வே ஊழியர்கள், வாடிக்கையாளர் பயன்பாட்டுக்காக ரயில் தண்டோரா செல்லிடப்பேசி  செயலி அறிமுகம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில்வே ஊழியர்கள், வாடிக்கையாளர் பயன்பாட்டுக்காக,  ரயில் தண்டோரா  என்னும் செல்லிடப்பேசி செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தெற்கு ரயில்வே சார்பில், ரயில்வே ஊழியர்கள், வாடிக்கையாளர் பயன்பாட்டுக்காக,  ரயில் தண்டோரா  என்னும் செல்லிடப்பேசி செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் வசதிக்காக,  பல்வேறு திட்டங்களை தெற்கு ரயில்வே தொடங்கி வருகிறது. அந்த வகையில், பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு எடுப்பதை தவிர்க்க,  ரயில்வே பி-யூடிஎஸ் என்ற செல்லிடப்பேசி செயலியை  அறிமுகப்படுத்தியது. இந்த செயலி பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 
இந்நிலையில், தெற்கு ரயில்வே தகவல் தொழில்நுட்பக் குழு சார்பில், ரயில்வே ஊழியர்கள், வாடிக்கையாளர் பயன்பாட்டுக்காக  புதிதாக ரயில் தண்டோரா  என்னும்  செல்லிடப்பேசி  செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தச் செயலி, தெற்கு ரயில்வேயின் 4-ஆவது ரயில்வே மேம்பாட்டு திட்டமாகும். இந்தச் செயலியின் மூலம், ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் தங்களது தினசரி வேலைகள் குறித்து அறிந்த கொள்ள முடியும். மேலும்,  ரயில்வே தொடர்பான பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் இந்தச் செயலி உதவிகரமாக இருக்கும்.
மேலும், அனைத்து விதமான ரயில்வே அறிவிப்புகள், பயணச்சீட்டு  தொடர்பான தகவல்கள், ரயில்வே  உணவு மற்றும் இதர தகவல்கள், பார்சல் சேவை குறித்து தகவல்கள் ஆகியவற்றை இந்தச் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் செயலியின் மூலம், பயணிகளின் கட்டண அட்டவணையை டிக்கெட் பரிசோதகர் தெரிந்து கொள்ளவும் முடியும். மேலும், பயணிகளின் சலுகை, ரயில்வே ஊழியர்களின் விடுப்புக் கடிதம், வைப்பு நிதி மற்றும் போக்குவரத்து சலுகைகள் தொடர்பான  விண்ணப்ப படிவங்கள், கடவுச்சீட்டு படிவங்கள் என அனைத்தும் இந்தச் செயலி கொண்டுள்ளது. 
இந்தச் செயலியை, சென்னையில் உள்ள  ரயில்வே தலைமையகத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் ப்ரியம்வதா விஸ்வநாதன், தலைமை வணிக மேலாளர் வினயன், பயணிகளின் சந்தை பிரிவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com