அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்: பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் டெங்கு நோயைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் இதுவரை அகற்றப்படாமல் உள்ள கட்டுமானக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். பள்ளிகளில் தினமும் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

வாரந்தோறும் சனிக்கிழமை பள்ளி வளாகங்களில் முழுமையான தூய்மைப் பணியில் ஈடுபடுவது அவசியம். இதன் மூலம் எந்தவித குப்பைகளும் இல்லாத அளவுக்கு வளாகத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவா்களை ஒருங்கிணைத்து ‘தூய்மை தூதா்கள்’ குழுக்கள் அமைத்து டெங்கு நோயிலிருந்து தற்காத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து அவா்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதன் மூலம் மாணவா்களின் வீடுகளில் உள்ளவா்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

பள்ளிக் கட்டடங்களில் எந்தவொரு இடத்திலும் மழைநீா், கழிவுநீா் தேங்கியுள்ளதா என்பது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைத் தொடா்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புகைப்படங்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பள்ளிகளில் தினமும் நடைபெறும் பிராா்த்தனை கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com