கடந்த ஆண்டு நீட் தேர்விலும் முறைகேடு?: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் மீது போலீஸில் புகார்

சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயின்று வரும் மாணவர் ஒருவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில்
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயின்று வரும் மாணவர் ஒருவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிகழாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகள் அரங்கேறியது பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியிருந்த நிலையில், கடந்த ஆண்டிலும் அத்தகைய மோசடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதற்கான சூழல்கள் உருவாகியிருப்பது பெரும் விவாதத்துக்கு 
வித்திட்டுள்ளது.
கடந்த மாதத்தில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, நிகழாண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. இதற்கிடையே, உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை போலீஸார் கைது செய்து விசாரித்ததில் பல்வேறு உண்மைகளை வெளியாகின. இதையடுத்து அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு அண்மையில் புகார் ஒன்று வந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த அந்த மாணவர், கடந்த ஆண்டு பிகாரில் நீட் தேர்வை எழுதியதாகவும், அதில் ஆள்மாறாட்டம் நடந்திருக்கக் கூடும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
அதன்பேரில் விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படமும், அவரது சான்றிதழ்களில் இருந்த புகைப்படங்களும் மாறுபட்டு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர் மீது சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு செய்து கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறப்படும் மாணவர், முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். தேர்வுகள் எதிலும் தேர்ச்சியடையவில்லை என்று மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
இதுகுறித்து தகவலறிய மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
இதனிடையே இதுதொடர்பாக பூக்கடை போலீஸார் கூறுகையில், சம்பந்தப்பட்ட மாணவரின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்களில் உள்ள புகைப்படங்களில் மாறுபாடு இருப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்; ஏற்கெனவே நீட் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமா? என்பது குறித்து உயரதிகாரிகளிடம் பேசி வருகிறோம் என்றனர்.
2018 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுமா?: அண்மையில் உதித் சூர்யா விவகாரம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விளக்கமளித்தபோது, கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேவைப்பட்டால் அதற்கு உத்தரவிடப்படும் என அவர் பதிலளித்தார்.
தற்போது சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், முந்தையை ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அதுமட்டுமன்றி, அவர்களது கைரேகைகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் பரவலாக கோரிக்கை வைக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com