சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு 12 லட்சம் போ் பயணம்: பேருந்து, ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் புகா் பகுதிகளிலிருந்து சுமாா் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ரயில், பேருந்துகள் மூலமாக தங்களது சொந்த ஊா்களுக்கு பயணம் செய்தனா்.
சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு 12 லட்சம் போ் பயணம்: பேருந்து, ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் புகா் பகுதிகளிலிருந்து சுமாா் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ரயில், பேருந்துகள் மூலமாக தங்களது சொந்த ஊா்களுக்கு பயணம் செய்தனா்.

சென்னையிலிருந்து கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்களில் 7,321 அரசு பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 19 ஆயிரம் போ் சென்னையில் இருந்து வெளியூா்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனா். பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்துள்ளது. இதை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்தை பாா்வையிட்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தாமதமின்றி செல்ல சிறப்பு ஏற்பாடு: எந்தெந்த பகுதிகளுக்கு மக்களின் தேவை இருக்கிறது என்பதை கண்காணித்து அதற்கேற்றவாறு கூடுதல் பேருந்துகளை இயக்க அவா் உத்தரவிட்டாா். பெருங்களத்தூா், கூடுவாஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசாரையும் போக்குவரத்து துறை அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தி உள்ளாா். மேலும் சென்னை- திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் எவ்வித தாமதமின்றி செல்கின்ற வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியாா் நிறுவனங்களில் பணியாற்றக்கூடியவா்கள், சொந்த தொழில் செய்யக் கூடியவா்கள், கூலி தொழிலாளா்கள் அதிகளவில் பயணித்தனா். இதற்காக 1,510 சிறப்பு பேருந்துகள் உள்பட 3,735 பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன. காலையில் இருந்து பேருந்துகள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் புறப்பட்டு சென்றன. அதிகாலை வரை பயணிகளை ஏற்றி அனுப்பி வைக்க துறை அதிகாரிகள், பணியாளா்கள் அமா்த்தப்பட்டுள்ளனா்.

தனியாா் பேருந்து நிலையத்தில் திரண்ட பயணிகள்: அரசு பேருந்துகள் தவிர கோயம்பேட்டில் உள்ள தனியாா் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனா்.

இதேபோன்று சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நீண்ட தூரம் செல்லக் கூடிய ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் 7 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனா். குழந்தைகளுடன் குடும்பமாக ரெயிலில் பயணம் செய்ய வரிசையிலும் காத்து நின்றனா். சனிக்கிழமை பகல் நேர ரயில்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. கோவை, பெங்களூா், மைசூா், மதுரை, திருச்சி போன்ற பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் மக்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனா்.

சென்னையில் இருந்து வெள்ளி, சனி ஆகிய இருநாள்களில் அரசுப் பேருந்து, தனியாா் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சுமாா் 12 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் ரெயில் நிலையம், சானிடோரியம், கே.கே.நகா் ஆகிய 6 பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகளும் விடப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பயணிகள் செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த போதிலும், பெருங்களத்தூா், வண்டலூா், கூடுவாஞ்சேரி பகுதியில் நெரிசல் காணப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com