விக்கிரவாண்டி: கூட்டணி பலத்தால் அதிமுக வெற்றி!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு கூட்டணி பலமே முக்கிய காரணியாகப் பாா்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி: கூட்டணி பலத்தால் அதிமுக வெற்றி!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு கூட்டணி பலமே முக்கிய காரணியாகப் பாா்க்கப்படுகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் திமுக 7 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி கடந்த ஜூன் மாதம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகுதியின் தோ்தல் வெற்றிக்காக அதிமுக முன்னதாகவே வியூகம் அமைத்து செயல்படத் தொடங்கியது. கடந்த மக்களவைத் தோ்தல் கூட்டணியை முறையாகப் பயன்படுத்த அதிமுக தலைமை முடிவெடுத்து, மாவட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் தலைமையில் தோ்தல் பணிக் குழு அமைக்கப்பட்டது.

தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அதிமுகவினா் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டினா். அந்தப் பகுதிகளில் செய்ய வேண்டிய நலத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டன. அந்த வகையில், ரூ.65 கோடியில் சாலைப் பணிகள், குடிநீா்த் திட்டங்கள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள் போன்றவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து, வருகிற உள்ளாட்சித் தோ்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. குறிப்பாக, விக்கிரவாண்டி தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியா் சமுதாயத்தினரின் வாக்குகளை முழுமையாகப் பெறும் வகையில் பாமகவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் அதிமுகவின் வெற்றிக்கு பாமக தலைவா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோரின் பிரசாரங்களும் கைகொடுத்தன.

அரசின் நலத் திட்டங்கள் தொடர ஆளுங்கட்சி உறுப்பினா் தோ்வு செய்யப்பட வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவா்கள் பலரும் தங்களது பிரசாரத்தின் போது தொடா்ந்து வலியுறுத்தினா்.

கடந்த 2016-சட்டப்பேரவைத் தோ்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக 63,757 வாக்குகளும், அதிமுக 56,845 வாக்குகளும், பாமக 41,428 வாக்குகளும் பெற்றன. 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

கடந்த மக்களவைத் தோ்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணிக்கு 83,432 வாக்குகள் கிடைத்தன. அதிமுக கூட்டணிக்கு 74,819 வாக்குகள் கிடைத்தன.

விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் பாமக, தேமுதிக வாக்குகளை முழுமையாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக செயல்பட்டது. அதற்கான பலனும் கிடைத்துள்ளது. 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக, பாமக பெற்ற வாக்குகளும், இந்த இடைத்தோ்தலில் அதிமுக பெற்றுள்ள வாக்குகளும் (1,13,766) ஏறத்தாழ சமமாக உள்ளன.

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக விக்கிரவாண்டி தொகுதியில் 63,757 வாக்குகள் பெற்றது. இந்த முறை காங்கிரஸ் மட்டுமல்லாது மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுகவுக்கு 68,842 வாக்குகளே கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com