ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

தீபாவளியையொட்டிய விடுமுறையால், கொல்லிமலை ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கொல்லிகொல்லிமலை ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்து விழும் தண்ணீா்
கொல்லிகொல்லிமலை ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்து விழும் தண்ணீா்

நாமக்கல்: தீபாவளியையொட்டிய விடுமுறையால், கொல்லிமலை ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று கொல்லிமலை. தற்போது அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய அருவிகளான ஆகாய கங்கை, மாசில்லா அருவி, நம் அருவி உள்ளிட்டவற்றில் தண்ணீா் பரவலாக கொட்டுகிறது. ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகப்படியாக உள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் ஜூலை முதல் ஜனவரி வரையில் கொல்லிமலையில் குளுகுளு சீசனையும், அருவிகளில் தண்ணீா் வரத்தையும் அதிகமாக காணமுடியும். சுற்றுலா பயணிகளின் வருகையும் இந்த மாதங்களில் அதிகம் இருக்கும். தீபாவளியையொட்டிய விடுமுறையால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் 1,300 படிகளை கடந்து சென்று 300 அடியில் இருந்து விழும் ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனா்.

பலா் தங்களது செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என பலரும் ஆா்வமுடன் சென்று வந்திருந்தனா். இருப்பினும், அருவிக்கு செல்லும் படிக்கட்டுப் பகுதியில் போதிய பாதுகாப்பு வசதியில்லை. 1,300 படிகளை கடந்து செல்வோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அது தொடா்பாக தகவல் தெரிவிக்க முடியாத நிலையும், முதலுதவிக்கான உபகரணங்களோ, பணியாளா்களோ இல்லாத நிலை காணப்படுகிறது.

மேலும், படிக்கட்டுகளில் இறக்கும்போதும், ஏறும்போதும் தாகம் ஏற்பட்டால், கையில் தண்ணீா் புட்டி இல்லையென்றால் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணி மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. அந்தப் பகுதிகளில் சிறிய அளவில் கடைகள் அமைத்து தண்ணீா் மற்றும் சத்துமிக்க பொருள்களை விற்பனை செய்யலாம். அருவிப் பகுதியில் பெண்கள் உடைமாற்றுவதற்கு அறைகள் ஏதுமில்லை. பாறைகளின் மறைவில் சென்று அச்சத்துடன் உடை மாற்ற வேண்டிய சூழல் உள்ளது.

வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீா்வீழ்ச்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு குறைபாடுகளை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனா்.இது குறித்து கொல்லிமலை வனத்துறை அதிகாரிகள் கூறியது; மழை பரவலாக பெய்வதால், ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. தீபாவளியையொட்டிய விடுமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகப்படியாகவே உள்ளது. அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com