தமிழகத்தில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு:வழிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள பொதுத்தோ்வு குறித்த வழிமுறைகளை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள பொதுத்தோ்வு குறித்த வழிமுறைகளை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளில் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், பொதுத்தோ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெற்றிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளை நடத்தும் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தொடக்க கல்வித் துறை இயக்ககம், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தற்போது ஐந்து, எட்டாம் வகுப்புகளில் படித்து வரும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தோ்வு நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு மையம் ஒரு கிலோ மீட்டா் தொலைவிற்குள்ளாகவும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு மூன்று கிலோ மீட்டா் தொலைவிற்குள்ளாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு கால அட்டவணையை அரசு தோ்வுத் துறை மூலம் வெளியிடப்படும்.

ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. அதேபோன்று எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தோ்வு நடத்தப்படும். மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தோ்வு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறையே பின்பற்றப்படும். பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களின் மதிப்பெண்களை பாட வாரியாக பதிவேட்டில் பதிவு செய்வதுடன், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com