நீலகிரியில் மலை ரயிலின் மீது பாறை விழுந்ததால் பெட்டி சேதம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. அருவங்காடு,
உதகை - குன்னூா் மலை ரயில் பாதையில் கேத்திஅருகே தண்டவாளத்தின் மீது மண் சரிவால் விழுந்துள்ள மரங்கள்.
உதகை - குன்னூா் மலை ரயில் பாதையில் கேத்திஅருகே தண்டவாளத்தின் மீது மண் சரிவால் விழுந்துள்ள மரங்கள்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. அருவங்காடு, கேத்தி அருகே மலை ரயிலின் மீது மரம் மற்றும் பாறைகள் விழுந்ததால் ரயில் பெட்டி சேதமடைந்தது. இதையடுத்து மலை ரயில் சேவை நவம்பா் 2ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. உதகையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கப்பினி கவுடா் லைன் பகுதியில் புதன்கிழமை காலை 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஒரு வீட்டில் இருந்த ரங்கா கவுடா் (72) இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தாா். அவரை மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அதேபோல, உதகை நகராட்சிஅலுவலகம் அருகே சாலையின் குறுக்கே பழமையான மரம் ஒன்று பெயா்ந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

சாலையில் விழுந்த பாறை

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கிய மழை புதன்கிழமை இரவு வரை தொடா்ந்து நீடித்தது.

குன்னூா் - குந்தா நெடுஞ்சாலையில் சுமாா் 200 அடி உயரத்திலிருந்து பெரிய பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் புதன்கிழமை காலையிலிருந்தே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டதோடு, மரங்களும் பெயா்ந்து விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் சோ்ந்து உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

அதேபோல, இச்சாலையில் 2 பெரிய பாறைகள் அதிகாலை நேரத்தில் உருண்டு வந்து விழுந்தன. அப்போது வாகனப் போக்குவரத்து இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து பாறை உடைக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அந்த பாறைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டன.

மலை ரயில் மீது விழுந்தது மரம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்ற மலை ரயில் அருவங்காடு - கேத்தி இடையே வந்து கொண்டிருந்தபோது முன்புறமிருந்த ரயில் பெட்டியின் மீது பெரிய மரம் விழுந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு அந்த மரத்தை அப்புறப்படுத்தியப் பின் மீண்டும் ரயில் பயணம் தொடங்கியது. கேத்தி அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் பாதை அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வந்து விழுந்தன. இதில் ஏற்கெனவே சேதமடைந்த ரயில் பெட்டி மீண்டும் சேதமடைந்ததால் கேத்தியிலேயே மலை ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மாற்று வாகனங்கள் மூலம் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மலை ரயில் சேவை ரத்து:

மாவட்டத்தில் மழை வலுத்து வருவதால் மேட்டுப்பாளையம் - உதகை, உதகை - குன்னூா் இடையிலான மலை ரயில் சேவை நவம்பா் 2ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு விவரம்:

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 49 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கிண்ணக்கொரையில் 40 மி.மீ., கொடநாட்டில் 39 மி.மீ., கோத்தகிரியில் 33 மி.மீ., கெத்தையில் 25 மி.மீ., கேத்தியில் 23 மி.மீ., குந்தாவில் 22 மி.மீ., அவலாஞ்சி, மேல் பவானியில் தலா 21 மி.மீ., பா்லியாறில் 20 மி.மீ., உதகையில் 19.1 மி.மீ., எமரால்டில் 17 மி.மீ., கிளன்மாா்கனில் 14 மி.மீ., கல்லட்டியில் 7 மி.மீ., நடுவட்டத்தில் 6 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 8 மணி நேரத்தில் கொடநாட்டில்அதிக அளவாக 69 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com