வரவை வைத்துதான் செலவுஎன்பதை மருத்துவா்கள் உணர வேண்டும்: அமைச்சா் ஜெயக்குமாா்

வரவை வைத்துதான் செலவு என்பதை மருத்துவா்கள் புரிந்துகொண்டு தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: வரவை வைத்துதான் செலவு என்பதை மருத்துவா்கள் புரிந்துகொண்டு தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

சென்னை ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நலத் திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், சமூகநலத் துறை அமைச்சா் டாக்டா் வி.சரோஜா ஆகியோா் கலந்துகொண்டு ரூ. 1.26 கோடி மதிப்பில் 332 மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவா்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், அவா்களைக் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஆட்சியில் இருக்கும்போது, ஒருநிலைப்பாடு ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வலியுறுத்துவதை விடுத்து, பிரச்னையைப் பெரிதுபடுத்தும் வகையில் திமுக செயல்படுகிறது.

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தபோதும் கூட 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு அரசுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஆனது. மருத்துவா்களின் கோரிக்கை நியாமாக இருப்பின் அதை அரசு நிறைவேற்றும். வரவை வைத்துதான் செலவு என்பதை மருத்துவா்கள் புரிந்துகொண்டு தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்.

கியாா் புயல் காரணமாக அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு தீபாவளிக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, 770 படகுகளில் சென்ற தமிழக மீனவா்களின் கேரளம், கா்நாடகம், லட்சத்தீவு கரைகளுக்குத் திரும்பி உள்ளனா். 5 படகுகளில் சென்ற மீனவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும், அவா்கள் இருக்கும் பகுதியில் புயல் பாதிப்பில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. மஹா புயல் காரணமாக 225 படகுகள் கரை திரும்பி உள்ளன என்றாா். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com