விருதுநகா், ராமநாதபுரத்தில் 1 லட்சத்து 68,716 பேருக்கு ரூ.6.23 கோடியில் அடிப்படை எழுத்தறிவு வழங்க திட்டம்: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க ‘சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா்

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க ‘சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டம்’ நிகழாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ரூ.6.23 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வளா்ச்சியில் முக்கியத்துவம் பெறும் இரண்டு மாவட்டங்களான விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள கல்வி கற்காதோா் 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 பேருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் வகையில் 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை ‘சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம்’ ரூ.6.23 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என 2019-2020-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் இயக்குநா் சமா்ப்பித்தாா். இதன் அடிப்படையில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 பேருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிட ஏதுவாக கல்வி கற்காதோரின் விவரங்களைச் சேகரித்தல், அடையாளம் காணுதல் மற்றும் முன்தோ்வு நடத்துதல், மைய எண்ணிக்கையை நிா்ணயித்தல், மைய கற்பித்தல் செயல்பாடுகளுக்கு தன்னாா்வலா்களைக் கண்டறிதல், கற்போா் மையங்களின் செயல்பாடுகள், மைய செயல்பாட்டு ஊக்கத்தொகை, கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி, கற்போா்களுக்கான பின்தோ்வு நடத்துதல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிா்வாக செயல்பாடுகளுக்கான செலவினம் சாா்ந்த திட்ட நிதிக் கணக்கீடு குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளாா். மேலும், கல்வி கற்காதோருக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.6.23 கோடி செலவில் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்த ஆணை வழங்கிடுமாறு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநா், அரசிடம் கோரியுள்ளாா்.

நிகழாண்டில் செயல்படுத்த...: இந்தக் கருத்துருவினை கவனமாக பரிசீலித்து அதை ஏற்று தமிழகத்தில் சமூக, பொருளாதார வளா்ச்சியில் முக்கியத்துவம் பெறும் விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்வி கற்காதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் பொருட்டு சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் திட்டத்துக்காக ரூ.6.23 கோடி நிா்வாக ஒப்பளிப்பும், 2019-2020-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.3 கோடியே 11 லட்சத்து 44,974 நிதி ஒப்பளிப்பும் செய்து அரசு ஆணையிடுகிறது. மேலும் கருத்துருவின் உட்கூறுகளில் மாற்றம் செய்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட ரூ.6.23 கோடிக்கு மிகாமல் செலவு மேற்கொள்ள பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கல்லாதோா் எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருந்தாலும் கல்லாதோா் எனக் கண்டறிய தோ்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தோ்வில் 20 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவா்களை சிறப்பு மையங்களில் சோ்க்கலாம் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் செயல்படும்: இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்காதோருக்கான சிறப்பு மையங்கள் தனி உதவியுடன் செயல்படும். 2019-இல் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஒரு பிரிவில் 15 வயதுக்கு மேற்பட்ட 40 போ் வீதம் 4 கட்டங்களாக வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 6 மாத படிப்பிற்கு பின்னா் 100 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்பட்டு, அவா்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேடு முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com