
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் திருமண விழா ஒன்றில் சந்தித்துக் கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி- 'முரசொலி' செல்வம் தம்பதியின் மகள் வழி பேத்தியின் திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திங்களன்று நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதியின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
இருவரும் ஒருவறையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.அப்போது அருகிலிருந்த துரைமுருகன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிவரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.