குரூப்-4 தேர்வில் பதிலுக்கு ஏற்ற கேள்வி இல்லை!

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
குரூப்-4 தேர்வில் பதிலுக்கு ஏற்ற கேள்வி இல்லை!

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
 இந்தத் தவறான கேள்விக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் தேர்வர்களிடையே எழுந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பிரிவில் 6,419 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
 தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவில் இருந்து 75 கேள்விகளும், திறனறி பிரிவில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்பட்டன. தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் எதை விருப்பமாக தேர்வர்கள் தேர்வு செய்தார்களோ அதிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டன. அதிகபட்ச மதிப்பெண்கள் 300 ஆகும். தேர்ச்சிக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 90 எடுக்க வேண்டும். இது அனைத்து வகுப்பினருக்கும் பொதுவானதாகும். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
 தவறான கேள்வி: இந்த நிலையில், இந்தத் தேர்வில் தவறான கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது பொது அறிவுப் பிரிவில் 185-ஆவது கேள்வியாக "தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்' எது எனக் கேட்கப்பட்டு அதற்கு ஏ) 20 அக்டோபர் 2005, பி) 21 அக்டோபர் 2005, சி) 25 அக்டோபர் 2005, டி) 12 அக்டோபர் 2005 என நான்கு விருப்பத் தேர்வுக்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கொடுக்கப்பட்டுள்ள இந்த 4 விருப்பத் தேர்விலும் அந்தக் கேள்விக்கான விடை இல்லை. இந்தச் சட்ட மசோதா 2004 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, மக்களவையில் 2005 மே 11-ஆம் தேதியன்றும், மாநிலங்களவையில் 2005 மே 12-ஆம் தேதியன்றும் நிறைவேற்றப்பட்டன. மசோதாவுக்கு 2005 ஜூன் 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானது. பின்னர் அரசிதழில் 2005 ஜூன் 21-இல் வெளியிடப்பட்டு, 2005 அக்டோபர் 12-ஆம் தேதி முதல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
 இதன்படி, சட்டம் நடைமுறைக்கு வந்தத் தேதியைத்தான், கேள்விக்கான விருப்பத் தேர்வு விடைகளில் ஒன்றாக (டி) கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, "தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்' என்றுதான் கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்' எனத் தவறுதலாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
 எனவே, தவறாக கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com