விநாயகர் சதுர்த்தி: காய்கறிகள், பூக்களின் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தி: காய்கறிகள், பூக்களின் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காய்கறிகள், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காய்கறிகள், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
 சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் 1, 889 காய்கறிக் கடைகள், 470 பூக்கடைகள் உள்ளன. இதில், காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதே போல், பூக்கடைகளுக்கு சென்னை மாநகர் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், மக்கள் வந்து செல்கின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மல்லிகை, முல்லை பூக்கள், கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சுமார் 50 டன் அளவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

காய்கறி விலை 20 சதவீத உயர்வு: தென் மாவட்டங்களில் மழை பெய்து உற்பத்தி அதிகரித்து இருந்ததால் கடந்த ஒரு வாரமாக காய்கறிகளின் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது முகூர்த்த தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து, கோயம்பேடு காய்கனிச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "எப்போதும் போல் 250 -300 லாரிகளில் சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. தேவை அதிகரித்துள்ள காரணத்தால் காய்கறிகளின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. அதன்படி, காய்கறிகளின் விலை விவரம் (கிலோ கணக்கில்): பட்டாணி கிலோ ரூ.80-130 , பீன்ஸ் ரூ. 70 , கேரட் ரூ.60, பல்லாரி வெங்காயம் ரூ.25-30 , இஞ்சி (புதியது) ரூ.80, பழையது ரூ.180 , சாம்பார் வெங்காயம் ரூ.60, வெண்டைக்காய் ரூ. 25 , பீட்ரூட் ரூ.20 , கோஸ் ரூ.25 , நூக்கல் ரூ.15, காலிஃபிளவர் ரூ.15, உருளை ரூ.18-20, சேனைக்கிழங்கு ரூ.30, சேப்பங்கிழங்கு ரூ.30, பச்சை மிளகாய் ரூ.25, கத்தரிக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.35, புடலங்காய் ரூ.20, கோவக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.15, முருங்கைக்காய் ரூ.40-50, தக்காளி ரூ.15-25 மற்றும் தேங்காய் ஒன்று ரூ.20 }க்கும் சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
 தற்போது விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வருவதால் அசைவ உணவுகளை பெரும்பாலானோர் உண்பதில்லை. இதன் மூலம் காய்கறிகளின் தேவை அதிகரித்திருப்பதால் இன்னும் சில நாள்களுக்கு இந்த விலையே தொடர வாய்ப்புள்ளது' என்றார்.
 பூக்கள் விலை 10 சதவீத உயர்வு: இதே போல் சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சாமந்தி மற்றும் மல்லியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதன்படி பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்): சாமந்தி - ரூ. 200 , ரோஜா - ரூ.150 , அரளி - ரூ.500 , சம்பங்கி - ரூ. 200 , மல்லி ரூ.500 , செண்டு ரூ.40, கனகாம்பரம் ரூ.600 விற்பனை செய்யப்படுகின்றன.
 இதுகுறித்து, பூ வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது: பூக்களின் வரத்து குறைவு காரணமாக விலை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் 5 சதவீதம் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com