புதுவையில் நாளை பேரவை துணைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் எம்எல்ஏ போட்டி

புதுவை சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.என்.ஆர்.பாலன் எம்எல்ஏ போட்டியிடுகிறார்.
புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை முதல்வர் வே.நாராயணசாமியிடம் வழங்குகிறார் பேரவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எம்.என்.ஆர்.பாலன்.
புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை முதல்வர் வே.நாராயணசாமியிடம் வழங்குகிறார் பேரவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எம்.என்.ஆர்.பாலன்.


புதுவை சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.என்.ஆர்.பாலன் எம்எல்ஏ போட்டியிடுகிறார்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, காலியான பேரவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இதில், துணைத் தலைவர் பதவி வகித்து வந்த வே.பொ.சிவக்கொழுந்து போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் காரணமாக, பேரவை துணைத் தலைவர் பதவி காலியானது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவை பூஜ்ய நேரத்தில் பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:
பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி கடிதம் அளித்து 14 நாள்கள் ஆகின்றன. பேரவைத் தலைவர் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். பேரவை துணைத் தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்றார்.
இதற்கு, பூஜ்ய நேரம் முடிந்த பின்னர், பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து பதிலளித்துப் பேசியதாவது: புதுவை சட்டப் பேரவை துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் என்றார்.
உடனடியாக எழுந்த அன்பழகன், ரகசிய வாக்கெடுப்பா? அல்லது வெளிப்படையான வாக்கெடுப்பா? எந்த அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, சட்டப் பேரவை விதிமுறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்று பேரவைத் தலைவர் பதிலளித்தார்.
பின்னர், பேரவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.என்.ஆர்.பாலன் எம்எல்ஏ, அவர் வகித்து வந்த புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், அதற்கான கடிதத்தையும் முதல்வர் நாராயணசாமியிடம் அவர் வழங்கினார்.
அறிவிப்பு வெளியீடு: இதனிடையே, சட்டப் பேரவை துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக புதுவை பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை சட்டப் பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிமுறை 10-ஆவது விதியின் துணை விதி 1-இன்படி, பேரவை துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும். துணை விதி 2-இன்படி, இந்தத் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் தங்களது நியமனச் சீட்டில் முன்மொழிபவர், வழிமொழிபவரின் கையெழுத்துடன் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்குள் (செப்.4) பேரவைச் செயலரிடம் மனு தாக்கல் செய்யலாம். நியமனச் சீட்டில் போட்டியிடுபவரின் பெயர் இருப்பதுடன், தான் தேர்வு செய்யப்பட்டால் பேரவை துணைத் தலைவராக பணியாற்ற சம்மதம் என்ற கடிதத்தையும் இணைத்து வழங்க வேண்டும். போட்டியிடும் உறுப்பினர்கள் தங்களை தாங்களே முன்மொழியவோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களில் முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ கூடாது. நியமனச் சீட்டுப் படிவத்தை சட்டப்பேரவைச் செயலரிடம் உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com