இமானுவேல் சேகரன் நினைவிடம் வருவோருக்கு கட்டுப்பாடுகள்: ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தவருவோர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
இமானுவேல் சேகரன் நினைவிடம் வருவோருக்கு கட்டுப்பாடுகள்: ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தவருவோர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
வரும் 11 ஆம் தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 
அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாடகை வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், சிறிய சரக்கு லாரி மற்றும் சைக்கிள் போன்றவற்றிற்கு  அனுமதி இல்லை.
சொந்த வாகனங்களான கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்களில் வருபவர்கள், அந்த வாகன எண், வாகன பதிவுச் சான்று,  ஒட்டுநர் உரிமம்,  அதில் பயணம் செய்வோர் விவரங்களை வரும் 8 ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) முன்பாக சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில்  கொடுத்து வாகன அனுமதிச் சீட்டு பெறவேண்டும். அச்சீட்டை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதியில்லை. வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற்று, அனுமதி வழித்தடத்தில் வர வேண்டும். 
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழிகளில் வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் கூடாது. சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் உள்ள பேனர்களைக் கட்டவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.  பரமக்குடிக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. கூடுதல் பேருந்துகள் 11 ஆம் தேதி மட்டுமே இயக்கப்படும். அதில் பயணச்சீட்டு பெறவேண்டும். 
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். பரமக்குடிக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழிகளில் நடைபயணமாக செல்லலாம்.  ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. அவை நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.
வரும் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை. நினைவு தினத்தன்று (செப். 11) ஊர்களில் புகைப்படம் வைத்து, ஒலிபெருக்கியின்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். அலங்கார ஊர்தி, மாட்டு வண்டி, சாதித் தலைவர்கள் வேடமணிதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. 
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும்  நேரம் ஒதுக்கீடு செய்ய,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (செப்.8) விண்ணப்பம் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com