மொஹரம் பொது விடுமுறை தேதி மாற்றம்: வரும் 11-இல் அரசு விடுமுறை அறிவிப்பு

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் மொஹரம் தினத்தை ஒட்டி வரும் 11-ஆம் தேதி பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் மொஹரம் தினத்தை ஒட்டி வரும் 11-ஆம் தேதி பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, நிகழாண்டுக்கான விடுமுறை பட்டியலில் வரும் 10-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது விடுமுறைக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக  தலைமைச் செயலாளர் க.சண்முகம் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-
இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்றான மொஹரம் மாதத்தின் 10-ஆவது நாள், மொஹரம் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இதற்கான பிறை தெரிவதை வைத்து மொஹரம் தினம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, பிறையானது 5 நாள்களுக்கு முன்பே பார்க்கப்பட்டு மொஹரம் தினம் தீர்மானிக்கப்படும். 
அந்த வகையில், வியாழக்கிழமையன்று மொஹரம் தினத்துக்குரிய பிறை ஏதும் தென்படவில்லை.
பிறை தென்படாத காலங்களில், மொஹரம் மாதத்தின் 10-ஆவது நாள் மொஹரம் தினமாகக் கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில், வரும் 11-ஆம் தேதியே மொஹரம் தினம் வருகிறது. 
நிகழாண்டுக்கான ஆண்டு விடுமுறைப் பட்டியலில் மொஹரம் தினம் செப்டம்பர் 10-ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, பிறை தெரிவதை வைத்துக் கணக்கிட்டதில் மொஹரம் தினம் வரும் 10-ஆம் தேதிக்குப் பதிலாக (செவ்வாய்க்கிழமை) வரும் 11-ஆம் தேதி (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படும்.
அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை விடப்படும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com