'காவிரி கூக்குரல்' இயக்கம்: ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை 

'காவிரி கூக்குரல்' என்ற பெயரில் ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜக்கி வாசுதேவுடன் மோட்டார் சைக்கிள் பேரணி குழுவினர்
ஜக்கி வாசுதேவுடன் மோட்டார் சைக்கிள் பேரணி குழுவினர்

சென்னை: 'காவிரி கூக்குரல்' என்ற பெயரில் ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அவரது ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

காவிரி கூக்குரல் இயக்கத்தில் தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சத்குரு மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் பேரணி வரும் 11-ம் தேதி தமிழகம் வருகிறது.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இவ்வியக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வியக்கத்தில் இரு மாநில அரசுகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சத்குரு அவர்கள் 3,500 கி.மீ தூரம் கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளார். செப்.3-ம் தேதி தலகாவேரியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர் குடகு, மடிகேரி, ஹன்சூர், மைரூரு, மண்டியா, பெங்களூரு வழியாக செப்.11-ம் தேதி தமிழகம் வருகிறார்.

செப்.11-ம் தேதி ஓசூர் வரும் அவர் தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி வழியாக செப்.15-ம் தேதி சென்னை செல்கிறார். இப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி செப்.17-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. பல்வேறு இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டங்களில் சத்குரு உரை நிகழ்த்த உள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.  பெங்களூருவில் நாளை (செப்.8) நடக்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் திரு.எடியூரப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com