நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டி என்று தீர்மானமா? விளக்கம் கேட்டு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் 

நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார்
காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார்

சென்னை: நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் நான்குனேரியில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். கூட்டத்தில்,  முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், ஹெச். வசந்தகுமார் எம்.பி, செய்திதொடர்பாளர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மாநில பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, கட்சியின் செயல்தலைவர் எஸ்.ஜெயக்குமார், திருநெல்வேலி மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். பழனிநாடார், மத்திய மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், முன்னாள் தலைவர் எம். மோகன்குமாரராஜா, வட்டாரத் தலைவர்கள் வாகைதுரை ரவிச்சந்திரன், சுயம்புலிங்கதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இதுதொடபாக காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் சனிக்கிழமையன்று விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நான்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து எந்தத் தீர்மானமும் முன்மொழியப்படவோ, வழிமொழியப்படவோ, நிறைவேற்றப்படவோ இல்லை

அப்படி இருக்க இப்படி ஒரு தீர்மானம் அடங்கிய நகல்களை கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் விநியோகித்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அவர் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவர் மீது நடவடிககை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com