டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 1.63 லட்சம் பணியாளர்கள்:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகம் முழுவதும் டெங்கு கொசு மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு பணிக்காக 1 லட்சத்து 63 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 1.63 லட்சம் பணியாளர்கள்:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


தமிழகம் முழுவதும் டெங்கு கொசு மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு பணிக்காக 1 லட்சத்து 63 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பருவ மழைக் காலத்துக்கு முன்பு டெங்கு, தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் தொடக்கமாக ஆய்வுக் கூட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு, தொற்று நோய்த் தடுப்பு விழிப்புணர்வுக் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது: மழைக்காலம் தொடங்குவதையொட்டி, டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் உள்ளாட்சி,  சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி,பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,522 ஊராட்சிகளில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் டெங்கு, தொற்றுநோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9,881 கொசு ஒழிப்பு புகைப் பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு 0.2 இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
ரூ. 16 லட்சம் அபராதம்: சென்னை உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொசுக்கள் உருவாகும் வகையில் கட்டடங்களைப் பராமரிப்பின்றி வைத்திருந்தவர்களுக்கு இதுவரை ரூ. 16 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதியை கொசுக்கள் உருவாகாத வகையில் பராமரிப்பதுடன், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
டெங்குவால் உயிரிழப்பு இல்லை: இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வடசென்னை, தருமபுரி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி சிலருக்கு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் இதுவரை தமிழகத்தில் உயிரிழப்புகள் நிகழவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாடு சுற்றுப்பயணத்தின்போது, பிரிட்டனைச் சேர்ந்த தனியார் சுகாதார நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கொசு ஒழிப்பில் உள்ள நவீன நடைமுறைகள், தொழில்நுட்பம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னைக்கு 5 வாகனங்கள்
டெங்கு கொசு மற்றும் தொற்று நோய்த் தடுப்பு குறித்து சென்னை மாநகராட்சிப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவை குறித்து பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடையாள அட்டையும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com