நான்குனேரி, விக்கிரவாண்டிக்கு விரைவில் தேர்தல்: சென்னையில் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு இந்திய தேர்தல் ஆணைய
நான்குனேரி, விக்கிரவாண்டிக்கு விரைவில் தேர்தல்: சென்னையில் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை


நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வந்தனர்.
தில்லியில் இருந்து வந்த தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய துணைத் தேர்தல் ஆணையருமான சந்தீப் சக்சேனா, தேர்தல் ஆணையத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஆகியோர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுடன் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நான்குனேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்தகுமார் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியை கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார். அதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த கு.ராதாமணி மரணமடைந்ததால் அந்தத்  தொகுதி கடந்த ஜூன் மாதத்தில் காலியானது. 
ஆறு மாதங்கள் கால அவகாசம்: ஒரு தொகுதி காலியான நாளில் இருந்து 6  மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதி. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்பு நிலுவை போன்ற சில காரணிகளால் மட்டுமே இடைத் தேர்தலை தள்ளிப்போட முடியும். அதன்படி, நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் நவம்பர் அல்லது டிசம்பருக்குள் இடைத் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும்.
இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் துறை தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தில்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்னை வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் அறிவிப்பு: இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாள்களில் இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடைத் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆளும் அதிமுகவுக்கு 123 (பேரவைத் தலைவருடன் சேர்த்து) எம்.எல்.ஏ.க்களும், திமுகவுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 7 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, சுயேச்சை தலா 1 என மொத்தம் 232 உறுப்பினர்கள் உள்ளனர். நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.
தயாராகும் அரசியல் கட்சிகள்: இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நான்குனேரி தொகுதியில் போட்டியிட்டு வென்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி, மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறது. 
அதேசமயம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுப்பது பற்றி திமுக தலைமை இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
அதிமுகவைப் பொருத்தவரையில், நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அந்தக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வென்றால் பேரவையில் அந்தக் கட்சிக்கான பலம் 125 ஆக அதிகரிக்கும். திமுக அல்லது காங்கிரஸ் கட்சி வென்றால் தங்களது பழைய எண்ணிக்கையை எட்டிப் பிடிக்கும். இரண்டு தொகுதிகள் காலியிடமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, திமுகவுக்கு 101 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com