மின்சார வாகன நிறுவனத்தில் முதல்வர் ஆய்வு

அமெரிக்க நாட்டின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்றார்.
அமெரிக்காவில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவன அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,
அமெரிக்காவில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவன அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,


அமெரிக்க நாட்டின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்றார். அங்கு வாகன உற்பத்தி, எரிசக்தி சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி வியாழக்கிழமை சென்றார். அங்கு சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கும் வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையிலும் அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள்,  அவற்றுக்கான பேட்டரிகளை பார்வையிட்டதுடன் எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு அமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார். மாசில்லாத எரிசக்தியை ஏற்கெனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேமிப்பது தொடர்பான வழிமுறைகள் பற்றியும், அந்தத் தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ப்ளூம் எனர்ஜி நிறுவனமானது, திட ஆக்ஸைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதர் ஆவார்.

இந்த ஆய்வுகளின்போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கே.கோபால், சந்தோஷ் பாபு, முதல்வரின் செயலாளர்கள் எஸ்.விஜயகுமார், ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்றுடன் நிறைவு: அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்ததுடன், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. 

இந்த நிலையில், தனது அமெரிக்க பயணத்தை சனிக்கிழமையுடன் (செப். 7) முதல்வர் நிறைவு செய்கிறார். 
அதன்பின், அமெரிக்காவில் இருந்து துபை நாட்டுக்குச் செல்கிறார். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் உள்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசுகிறார். செப்டம்பர் 8,  9 தேதிகளில் துபையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி அங்கியிருந்து வரும் 10-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார். இதைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக விரிவான விளக்கத்தை அவர் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com