சுடச்சுட

  

  கடைகள், தொழில் உரிமங்கள்  பெற இனி ஆன்-லைனில்  மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும்: தொழிலாளர் நலத் துறை அறிவிப்பு

  By DIN  |   Published on : 10th September 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கடைகள், தொழில் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் பெற  இனி ஆன்லைனில் மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டுமென  தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
   இதுகுறித்து, அந்தத் துறையின் ஆணையாளர் ஆர்.நந்தகோபால் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் ஆகியன தொழிலாளர் நலத் துறையில் உள்ள இணையதளம் வழியாகவே அனைத்து நடைமுறைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
  குறிப்பாக, உரிமங்கள் பெறுதல், புதுப்பித்தல், திருத்தங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதற்கான கட்டணங்களையும் ஆன்-லைன் மூலமாகவே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பித்த மனுக்களை பரிசீலித்து உடனுக்குடன் உரிமம் வழங்கவும், அதிகபட்சமாக 15 நாள்களுக்குள் உரிமம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  ஆன்-லைன் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழை இணையவழி மூலமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலாளர் துறையால் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளிலும், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 
  ஆய்வுக்குரிய நிறுவனங்கள் கணினி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழிலாளர் துறை அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் வரும் நிறுவனங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குறைந்த இடர்பாடுடைய நிறுவனங்கள், நடுத்தர அளவில் இடர்பாடுடைய நிறுவனங்கள் மற்றும் அதிக இடர்பாடுடைய நிறுவனங்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
  குறைந்த இடர்பாடுடைய நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், நடுத்தர இடர்பாடுடைய நிறுவனங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அதிக இடர்பாடுடைய நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆண்டுதோறும் தொழிலாளர் துறையில் சமர்ப்பிக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஆண்டறிக்கைகள், ஒருங்கிணைந்த அறிக்கையுடன் கூடிய சுயசான்றிதழ்கள் ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai